கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதோடு மேலும் சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, மாவட்ட ஆட்சித் தலைவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இது குறித்துத் தீர விசாரிக்கவும், உரிய மேல்நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், இவ்வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணையில் ரசாயனம் கலந்த சாராயம் விற்ற வழக்கில் கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தாமோதரன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சின்னத்துரையை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
சின்னத்துரை என்பவர், மெத்தனால் ரசாயனம் கலந்த சாராயத்தை கண்ணுக்குட்டிக்கு விற்றுள்ளார். இதில் முக்கிய குற்றவாளியாக சின்னத்துரையே இருக்கிறார். இந்த நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சின்னத்துரையை அதிரடியாக கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சாராயம் மற்றும் மெத்தனால் உள்ளிட்டவை ஏதேனும் புதுச்சேரியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு கடத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த தமிழகத்தை சேர்ந்த இரண்டு தனிப்படைகள் புதுச்சேரியில் உள்ள மூன்று சாராய வியாபாரிகளிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமைச்சர்கள் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ. வ. வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையான ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.