கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தாக்கம், ரஷ்யா -உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக உலகெங்கும் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இதே காரணங்களால் உலகத்தின் பெரும் பணக்காரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெப் பிசோஸ், ஏலான் மஸ்க், மார்க் சுக்கர்பெர்க் போன்ற பணக்காரர்களின் சொத்து மதிப்பும் 60 பில்லியன் டாலர் அளவு கடுமையாக சரிந்துள்ளது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதர பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இந்தியாவின் ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு சரிந்துள்ளது. ஆனால் இந்த பாதிப்பு ஏதும் இந்திய பணக்காரரான அதானியை பாதிக்காமல் இருந்ததோடு, அவரின் சொத்துமதிப்பும் கடுமையாக அதிகரித்து வந்தது.
இதற்கு முக்கிய காரணமாக பிரதமர் மோடியுடன் அதானிக்கு இருக்கும் நெருக்கமான தொடர்பு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமை அதானிக்கு கிடைத்துள்ளது. ப்ளூம்பெர்க் குறியீட்டின்படி, அதானியின் சொத்துமதிப்பு 111 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முகேஷ் அம்பானி 109 பில்லியன் டாலருடன் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை கடந்த சில வருடங்களாக அம்பானி மற்றும் அதானி ஆகியோர் மாறி மாறி வகித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.