இந்தியா

நாடாளுமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர துடிக்கும் ஒன்றிய அரசு : வெளியான அதிர்ச்சி தகவல்!

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை சபாநாயகர் கட்டுப்பாட்டிலிருந்து உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர துடிக்கும் ஒன்றிய அரசு :  வெளியான அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவை, மாநிலங்களவை உள்ளடக்கிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு என்பது மக்களவை சபாநாயகரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைப்படி தான் செயல்பட்டு வருகிறது. 1929 முதல் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில், இந்த நடைமுறையை மாற்றும் வகையில் கடந்த மே 3 ஆம் தேதி உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. அதில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்வதற்குக் குழு அமைக்கப்படுவதாகவும், பாதுகாப்புக்குக் கூடுதல் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நியமிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவின் படி மத்திய தொழில் பாதுகாப்புப் படை இயக்குநர் அஜய்குமார், நாடாளுமன்ற பாதுகாப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு என்பது சபாநாயகரின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்க வேண்டும் என்று முன்னாள் மக்களவை செயலாளர் ஆச்சாரி தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றம் என்பது விமான நிலையங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனம் அல்ல. நாடு முழுவதும் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது சபாநாயகர் அதிகாரத்துக்கும், மக்களவைச் செயலகத்துக்கும் உட்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல் ஒன்றிய அரசின் இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் விமர்சித்து சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”நாடாளுமன்றத்தின் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் மையப்பகுதியாகும். உள்துறை அமைச்சகம் உண்மையில் சபாநாயகரின் அதிகாரங்களை அபகரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் நாடாளுமன்ற பாதுகாப்பு சென்றால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்குள் அவை காவலர்களை நியமிப்பது, நாடாளுமன்ற எம்பிக்கள், அவர்களின் உதவியாளர்கள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோர் அனுமதிப்பது உள்ளிட்ட அனைத்து முடிவுகளும் ஒன்றிய தொழில் பாதுகாப்புப் படைக்குச் சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories