ஆங்கிலேயரிடமிருந்து 1947-ல் விடுதலையடைந்த இந்தியாவில், 1951ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைமுறை இருந்து வருகிறது.
எனினும், கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவில், தற்போதைய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒன்றிய அரசிற்கு மிகவும் சார்புடைய நடவடிக்கைகளாக அமைந்திருக்கிறது.
அதற்கு, மோடியின் வெறுப்பு மற்றும் பொய் பிரச்சாரங்களே, தவிர்க்க முடியாத எடுத்துக்காட்டுகளாகவும் இருக்கின்றன.
அவ்வகையில், காங்கிரஸ் அறிக்கையில் இடம்பெறாத கருத்துகள், காங்கிரஸ் தலைவர்களால் முன்மொழியப்படாத கருத்துகள், கடந்த காலங்களில் நிகழாத நடவடிக்கைகள் என தேர்தல் பிரச்சாரங்களில் பேசி வருவது பலவும் பொய்யென ஊடகங்கள் தெளிவுபடுத்திட்டும்,
இஸ்லாமியர்களை குறிவைத்து, மதத்தின் அடிப்படையிலான பிளவுகளை உண்டாக்குகிற கருத்துகளை மோடி பேசி வருவதற்கு, சுமார் 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தும்,
மோடி அவ்வாறு எதுவும் செய்யாதது போல, தட்டிக்கழித்து வருகிறது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையத்தின் இந்நடவடிக்கைக்கு எதிரான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டபோது கூட, அவ்வழக்கினை தள்ளுபடி செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உயர்நீதிமன்றம்.
இவ்வாறு, குற்றங்கள் அம்பலமானாலும், தண்டனைகளிலிருந்து தப்பித்து வரும் மோடிக்கு தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சூழலில், அமலில் இருக்கும் தேர்தல் நடத்தை விதிமுறை (Model Code of Conduct), மோடியின் தேர்தல் நடத்தை விதிமுறையாக (Modi Code of Conduct) மாற்றம் கண்டுள்ளது” என பா.ஜ.க.வின் தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்காதது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி கூற்றை, பா.ஜ.க.வின் பிரச்சாரங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது, மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் நடத்தை விதிமீறல்கள் உறுதி படுத்தி வருகின்றன.
இந்நிலையில், இன்று (07.05.24) நடந்து முடிந்த, 3ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின் போது கூட, குஜராத் மாநிலத்தின் காந்திநகர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பா.ஜ.க சின்னம் பொறித்த தூவள் (பேனா) பயன்படுத்தப்பட்டதை, ஆதரத்துடன் வெளிக்காட்டியுள்ளார் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சக்திசிங்.
எனினும், இதற்கு தற்போது வரை தேர்தல் ஆணையத்திடமிருந்து, எவ்வித அதிகாரப்பூர்வ கண்டனமும் வெளியாகவில்லை.
இதுகுறித்து திரிணாமுல் கட்சியின் மக்களவை வேட்பாளர் மஹுவா மொய்த்ரா, “தேர்தல் ஆணையத்திற்கு எதுவும் தெரியாமல் ஒன்றும் இல்லை. மோடியின் வெறுப்புணர்வு கொண்ட பேச்சை அவர்கள் தெரிந்துதான் அனுமதிக்கிறார்கள். மோடியின் விதிமீறல்களில் அவர்களும் கூட்டாளிகளாக இருக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.
இந்த சூழலில், ஜனநாயகத்தை நிறுவுகிற இடத்தில் இருக்கிற, தேர்தல் ஆணையமே, ஒன்றிய பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து, மக்களாட்சிக்கு எதிராக செயல்படுவது, தேர்தலை நம்பியிருக்கிற மக்களை அச்சப்படுத்தியுள்ளது என நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.