மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறை இன்றுடன் ஓராண்டு தொடர்கிறது. இந்நிலையில் இம்மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தாத ஒன்றிய பா.ஜ.க அரசை இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மணிப்பூர் இன்னமும் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசால் மேம்போக்காக ஆளப்படுகிறது. ஆனால் அதன் அதிகாரம் முக்கியமாக மெய்தி மக்கள் வசிக்கும் இம்பால் பள்ளத்தாக்கிற்கு அப்பால் செயல்படவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில்," 2023 மே 3 அன்று மணிப்பூரில் வெடித்த கலவரத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று! முழுமையாக 365 நாட்கள் கடந்துவிட்டன. இன்றுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல விருப்பம் காட்டவோ அல்லது நேரத்தைக் கண்டுபிடிக்கவோ முடியவில்லை.
கடந்த பிப்ரவரி வரை சுமார் 219 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் வாழ்த்து வருகின்றனர். கலவரத்தின் போது ஏராளமான வீடுகள் இடிக்கப்பட்டன மற்றும் வழிபாட்டுத் தலங்கள் - தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த கலவரத்தால் மணிப்பூர் மாநிலம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்து கிடக்கிறது. அங்கே 2 நிர்வாகங்கள் நடக்கிறது. ஒன்று மெட்ய்திக்களுக்காக மெய்திகளாலும், மற்றொன்று குக்கி சமூகத்தினருக்காகக் குக்கிகளாலும் நிர்வாகங்கள் நடைபெறுகிறது.
அதேவேளையில் மணிப்பூர் இன்னமும் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசால் மேம்போக்காக ஆளப்படுகிறது. ஆனால் அதன் அதிகாரம் முக்கியமாக மெய்தி மக்கள் வசிக்கும் இம்பால் பள்ளத்தாக்கிற்கு அப்பால் செயல்படவில்லை. பாஜகவின் 'Act East' கொள்கையானது, காங்கிரஸின் 'Look East' கொள்கையை விட முன்னேற்றமானது என்று கூறப்பட்டது. ஆனால் மோடியின் ஒன்றிய அரசு மணிப்பூரின் திசையைப் பார்க்கவோ, வன்முறைக்குள்ளான மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவரவோ மறுத்து விட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 355வது பிரிவு முடமாக உள்ளது. அரசியலமைப்பின் 356வது பிரிவு துருப்பிடித்து வருகிறது. திறமையற்ற, மதிப்பிழந்த பாஜக அரசாங்கம், பெருமை வாய்ந்த வரலாற்றைக் கொண்ட பெருமைமிக்க மாநிலத்தை வழிநடத்துகிறது. இதற்கிடையில், மணிப்பூர் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றனர். மணிப்பூர் மக்களுக்காக நான் வருந்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.