ஆந்திர பிரதேச மாநிலத்தில் வரும் மே 13 ம் தேதி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டுபணம் கொண்டு செல்வதை தடுக்க மாநிலம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடத்தில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
அதில் உரிய அனுமதி இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டுசெல்லப்படும் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்ர். அந்த வகையில் அனந்தபுரம் மாவட்டம் பாமிடி மண்டலம் கஜ்ராம்பள்ளியில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த 4 கண்டெய்னர்களை நிறுத்தி போலிஸார் சோதனை நடத்தினர். அதில் கட்டுகட்டாக ரூ. 2000 கோடி பணம் இருப்பது கண்டு பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து விசாரணையில் ஈடுபட்டபோது இது குறித்த உண்மை விவரம் தெரியவந்தது.
விசாரணையில், இந்த பணம் ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு கொண்டு செல்வது தெரியவந்தது. அதற்கான ஆவணங்களை பறக்கும் படையின் உயரதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதன் பின்னர் கண்டெய்னர்கள் உரிய அனுமதியுடன் செல்வது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கண்டெய்னர்கள் அங்கிருந்து உரிய இடத்துக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.