இந்தியா

பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் மீது நடந்த கொடுமைகளை மறக்க முடியுமா? : அமித்ஷா கருத்துக்கு சித்தராமையா பதிலடி!

தேசத்தின் பெண்களுக்கு உண்மை தெரியும் என அமித்ஷாவின் கருத்துக்கு சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் மீது நடந்த கொடுமைகளை மறக்க முடியுமா? : அமித்ஷா கருத்துக்கு சித்தராமையா பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் பிரிஜ்வல் ரேவண்ணா. இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கூட.

இந்நிலையில் இந்த மக்களவை தேர்தலில் ஹாசன் தொகுதியில் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும், பா.ஜ.கவும் இணைந்து இந்த தேர்தலைச் சந்திக்கிறார்கள். இங்கு ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததை அடுத்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள். கடும் எதிர்ப்புகள் எழுந்து வருவதை அடுத்து, "பிரஜ்வல் ரேவண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க மகளிருக்கு ஆதரவாக இருக்கும் என்று அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். தற்போது மக்களவை தேர்தல் நேரம் என்பதால் இப்படியான ஒரு கருத்தை அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமித்ஷாவின் கருத்துக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை உங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் செய்தாலும் அதை நீங்கள் மன்னிக்கவில்லை என்று கூறியுள்ளீர்கள்.

ஆனால் கடந்த காலங்கள் உங்களது பேச்சு மலிவானது என்பதை காட்டுகிறது. நாட்டிற்காக ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வாங்கிய மல்யுத்த வீராங்கனைகள் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை மறக்க முடியுமா? டெல்லி தெருக்களில் பெண் விளையாட்டு வீரர்கள் வாரக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது யாருடன் நின்றீர்கள்?.

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை பா.ஜ.க கட்சிக்காரர்கள் மாலை அணிவித்து வரவேற்றதை மறக்க முடியுமா?. உன்னாவ் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உங்கள் கட்சி பின்னால் இருந்து செயல்பட்டதை மறக்க முடியுமா?

ஹத்ராஸ் வழக்கு குற்றவாளிகளை உங்கள் கட்சி எப்படி பாதுகாத்தது என்பதை மறக்க முடியுமா?. மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக அணிவகுத்துச் சென்றபோது பாஜக கண்ணை மூடிக்கொண்டதை மறக்க முடியுமா?. தேசத்தின் பெண்களுக்கு உண்மை தெரியும், நீங்கள் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ள வேண்டிய நேரம் இது” என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories