வாக்குப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு சாதமாக முறைகேடுகள் நடப்பதாக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள விவிபேடில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களையும் 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் நீதிபதி சஞ்சய் சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
VM, VVPAT ஆகிய இரு இயந்திரங்களும் தனித்தனியாக சீல் செய்து பாதுகாக்கப்படுகிறதா? மைக்ரோ கண்ட்ரோல் யூனிட் ஒரு முறை புரோகிராம் செய்யப்படக் கூடியதா? மைக்ரோ கண்ட்ரோலர், கண்ட்ரோலிங் யூனிட்டில் நிறுவப்பட்டுள்ளதா அல்லது VVPATல் உள்ளதா? என்று வினவினர்.
VVPAT மெமரி யூனிட் குறித்து கூடுதல் விபரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் தேர்தல் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டனர்.
தேர்தல் தொடர்பாக 30 நாட்களுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்பதால், 40 நாட்களின் தரவுகள் சேமிக்கப்படுகின்றன என தெரிவித்துள்ள நீதிபதிகள், ஆனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் வழக்கு தொடர 45 நாட்கள் அவகாசம் உள்ளது என்று குறிப்பிட்டனர். அப்படியானால் தரவுகள் சேமித்து வைக்கும் காலத்தை அதிகரிக்க வேண்டாமா? என்று நீதிபதிகள் வினவினர்.
மேலும் VVPATல் உள்ள flash memory மறு புரோகிராம் செய்ய கூடியதுதான். அதேபோல் மைக்ரோ கட்டுப்பாட்டு chipல் மாறுதல் செய்ய முடியும் என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதித்துள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்டு முடிந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.