மேற்குவங்க மாநிலத்தில் மக்கள்வை தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. மால்டா மாவட்டத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய மம்தாபானர்ஜி,"ஒன்றியத்தில் பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். எனவே, தற்போதைய மக்களவைத் தேர்தல், நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகும். பா.ஜ.க.வின் ஆணையம் போல தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது. பா.ஜ.க.வின் தொண்டர்கள் போல மத்தியப் படையினர் பயன்படுத்தப்படுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியுமா?
பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காகவே 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. எதிர்க்கட்சிகளை நசுக்கி, அதன் மூலம் தன்னை நிலைநாட்டுவதில் பா.ஜ.க. நம்பிக்கை கொண்டுள்ளது. தேர்தல் ஆதாயத்துக்காக மக்களை பா.ஜ.க. பிளவுபடுத்துகிறது. பொது சிவில் சட்டத்தை அமலாக்குவது அக்கட்சியின் நோக்கம். இதன் மூலம் தங்களது சொந்த மதம், கலாச்சாரம், சடங்குகள் மீதான மக்களின் உரிமைகள் பறிபோகும்" என தெரிவித்துள்ளார்.