தில்லி மாநில முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மோடி அரசின் அமலாக்கப் பிரிவால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டதையொட்டி, கடந்த ஆண்டு மார்ச் 28 அன்று தில்லி சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் காணொலி சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. மோடி ஜியும், அதானியும் கூட்டுக் களவாணிகளாக இணைந்து அடித்த கொள்ளைகளைப் பற்றி, உலகமகா ஊழல்களைப் பற்றி சட்டமன்றத்தில் ஆணித்தரமாக, ஆவேசமாக எடுத்துரைக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அவர் மீது ஆத்திரம் கொள்ள மோடி அரசுக்கு இந்த உரை கூட காரணமாக இருக்கக் கூடும்.
சில நாட்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவரை சந்தித்தேன். நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தோம். அவர் சொன்ன சில விஷயங்கள் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவற்றை நீங்கள் கேட்டால், அதிர்ச்சியில் நின்று விடுவீர்கள். அவர் என்னிடம் கேட்டார், ‘‘மிஸ்டர் கெஜ்ரிவால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதானிக்கு மோடி ஏன் இவ்வளவு உதவி செய்கிறார்?”. நான் சொன்னேன், “அவர்கள் நண்பர்கள், அதனால் தான் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள்.”
அவர் சொன்னார்: “மோடி இதுவரை யாருக்காகவும் எதையும் செய்ததில்லை. அவர் மனைவிக்காக எதுவும் செய்ததில்லை. அவர் அம்மாவுக்கு எதுவும் செய்ததில்லை. அவரது சகோதரர்கள் குஜராத்தில் வசிக்கின்றனர். அவர் தனது உறவினர்கள் யாருக்கும் எதுவும் செய்ததில்லை. அவர் தந்தைக்காக எதுவும் செய்ததில்லை. அவர் தனது அரசியல் குருவுக்காகவும் எதையும் செய்ததில்லை. அவர் நண்பருக்காகவா இவற்றை செய்யப் போகிறார்? இது எப்படி சாத்தியம்? அவர் ஏன் தனது நண்பரிடம் இவ்வளவு அன்பாக இருக்கிறார்? இது என்ன வகையான நட்பு? இன்றைய உலகில் தன் சகோதரனுக்காக எதுவும் செய்யாதவர், தன் நண்பருக்காக எதையும் செய்வாரா?”
அதானி மூழ்கினால் மோடியே மூழ்குவார்
நான் கேட்டேன்: “அப்புறம் என்ன விஷயம்? நீங்களே யோசியுங்கள். அவ்வளவு பெரிய நெருக்கடி ஏற்பட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கை வந்தது. சலசலப்பு ஏற்பட்டது. சுற்றிலும், ஒட்டுமொத்த அதானி குழுமமும் நொறுங்கியது. அதானியை விட மோடிதான் துடிதுடித்துப் போனார், ஏன்?” என்றேன். அவரே யோசித்துச் சொன்னார்: “அதானியிடம் உள்ள பணம் அனைத்தும் மோடியின் பணம். அதானி வெளியில் தெரியும் முகம். அதானி மோடியின் பணத்தை மட்டுமே நிர்வகிக்கிறார். அவர்தான் மேலாளர். அவருக்கு 10 சதவீதம், 15 சதவீதம், 20 சதவீதம் கமிஷன் கிடைக்கிறது. மீதி பணமெல்லாம் மோடி ஜி உடையது. நாளை ஜேபிசி, இடி, சிபிஐ விசாரணை நடத்தினால், அதானி மட்டுமே மூழ்க மாட்டார்; மோடிஜியும் மூழ்கிவிடுவார். அதானி எந்த நாளில் மூழ்கி விடுகிறாரோ, அந்த நாளில் மோடி மூழ்கிவிடுவார்.” அவருக்கும், பிரதமர் மோடிக்கும் பணத்தின் தேவை என்ன என்றேன். அவருக்கு குடும்பம் என்று யாரும் இல்லையே, என்ன தேவை அவருக்கு? என்றேன். பேராசை இருக்கிறதே என்று அவர் சொன்னார்.
ஆசை... ஆசை... முதல் பணக்காரராக...
“அதானி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் ஆன நாளில், உண்மையில் அதானி பணக்காரராக மாறவில்லை; மோடி ஜிதான் உலகின் இரண்டாவது பணக்காரர் ஆனார். இப்போது மோடிஜியின் கனவு, உலகின் மிகப்பெரிய பணக்காரராக வேண்டும் என்பதுதான். அவர் பிரதமராகி விட்டார். உலகின் மிகப்பெரிய பணக்காரராகவும் வர விரும்புகிறார்” என்று விவரித்தார் அந்த பாஜக மூத்த தலைவர். பிறகு ஒவ்வொன்றாகச் சொன்னார். மெல்ல, மெல்ல, மெல்ல, முதலில் அதிர்ந்து போனேன், என்ன சொல்கிறார் இவர்? அதானியிடம் இருக்கும் பணமெல்லாம் மோடியின் பணமா?
இலங்கை, வங்கதேசம், இஸ்ரேல்...
பின்னர் மெதுவாக, அவர் எனக்கு வெளிப்படையாக விளக்க ஆரம்பித்தார்: அதைச் சொல்கிறேன் கேளுங்கள்... “மோடிஜி இலங்கை சென்றார். காற்றாலை திட்டத்தின் மூலம் அதானியை அங்கு கொண்டுவர மோடிஜி, ராஜபக்சவை கட்டாயப்படுத்தினார். மோடி ஜி ராஜபக்சவுக்கு வலுக்கட்டாயமாக அழுத்தம் கொடுத்து காற்றாலை திட்டத்தை அதானிக்கு பெற்றுத் தந்தார். இது எப்படி வெளிவந்தது? இலங்கை நாடாளுமன்றத்தின் நிலைக்குழு தங்கள் மின்சார வாரியத் தலைவரை அழைத்து ஏன் இந்த திட்டத்தை அதானிக்கு கொடுத்தீர்கள் என்று கேட்டபோது, ராஜபக்சவுக்கு மோடி ஜி அதிக அழுத்தம் கொடுக்கிறார் என்று பதில் வந்தது. மோடி வங்கதேசம் சென்றார். வங்கதேச மக்கள் மின்சாரம் வாங்க வேண்டியிருந்தது. 25 ஆண்டுகளுக்கு 1500 மெகாவாட் மின்சாரம். மோடிஜி அந்த திட்டத்தை அதானிக்கு பெற்றுத் தந்தார். அவர் இஸ்ரேலுக்கு சென்றார். இஸ்ரேலுடன், இந்தியா பல வர்த்தக ஒப்பந்தங்களை செய்து கொண்டது. அந்த வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் அதானிக்கு வழங்கப்பட்டது. மேற்கண்ட அனைத்தும் அதானிபெயரில் மோடிஜியே எடுத்துக் கொண்டவை.
நிபந்தனை நீக்கமும் விமானநிலைய ஏலமும்
2-3 ஆண்டுகளுக்கு முன்பு, 6 விமான நிலையங்கள் தனியார்மயமாக்கலுக்கு ஏலம் விடப்பட்டன. அவற்றை அரசு ஏலம் எடுத்தது. முன்பு விமான நிலைய முன் அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலை இருந்தது. அதானி அந்த அனுபவம் தன் நிறுவனத்துக்கு இருக்கிறது என்று சொல்ல முடியாது. மோடி ஜி என்ன செய்தார் தெரியுமா? கடைசி கணத்தில் அந்த நிபந்தனை நீக்கப்பட்டது. அனுபவம் தேவையில்லை என்றார்கள். 6 விமான நிலையங்கள் ஏலம் விடப்பட்டன. அதானிக்கே 6 விமான நிலையங்களும் கொடுக்கப்பட்டன. உண்மையில் அதானிக்கு வழங்கப்படவில்லை; ஏனென்றால் ஆறு விமான நிலையங்களுக்கும் மோடியே பெயர் வைத்தார். 2021 இல், விமான நிலையம் கையகப்படுத்தப்பட்டது. 1.5 ஆண்டுகளில், விமான நிலைய வணிகத்தில் 30 சதவீதம் - ஒட்டுமொத்த நாட்டின் விமான நிலைய வணிகத்தில் 30 சதவீதம் வணிகம் மோடிஜியிடம் சென்றது.
ஐ.டி., ஈ.டி., சிபிஐ சோதனையும் துறைமுகம், சிமெண்ட் ஆலை, விமான நிலையம்
அக்டோபர் 10, 2018 அன்று, கிருஷ்ணாபட்டினம் துறைமுகத்தில், வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. 1.5 ஆண்டுகளுக்குப் பிறகு, 6 ஏப்ரல் 2020 அன்று அந்த துறைமுகத்தை அதானி நிறுவனம் வாங்கியது. 10 டிசம்பர் 2020, ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட் ஆகியவை சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அக்டோபர் 16, 2022 அன்று இரண்டு சிமெண்ட் ஆலைகளும் மோடிஜியிடம் சென்றன. அதாவது அதானியிடம் சென்றடைந்தது. ஜூலை 20, 2020 அன்று மும்பை விமான நிலையத்தின் உரிமையாளரான ஜி.வி.கே. சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவால் சோதனை செய்யப்பட்டார். ஒரு மாதம் கழித்து, மும்பை விமான நிலையம் மோடிஜிக்கு - அதானிக்கு சென்றது.
10 சதவீத நிலக்கரி இறக்குமதி அதானியிடமிருந்தே வாங்க ஆணை
சில நாட்களுக்கு முன், அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும், அனைத்து மாநில அரசுகளும், நமது பஞ்சாப் அரசு உட்பட ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளன. அனைத்து அரசுகளும், அவற்றின் நிலக்கரி தேவைக்கு ஏற்ப, அதில் 10 சதவீதம் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டும். அதை மோடி ஜி மட்டுமே இறக்குமதி செய்வார்; அதாவது, அதானியே இறக்குமதி செய்வார். இதன் பொருள், உங்கள் நிலக்கரியில், 10 சதவீதம் கட்டாயம் வெளியில் வாங்க வேண்டும்; தேவையில்லை என்றாலும், நீங்கள் அதானியிடம் இருந்து 10 சதவீதம் நிலக்கரியை வாங்க வேண்டும். நம் நாட்டின் நிலக்கரி டன் ஒன்றுக்கு 2,000 ரூபாய். இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி டன் ஒன்றுக்கு 20,000 ரூபாய். நீங்கள் அதானியிடம் இருந்து 10 சதவீத நிலக்கரியை வாங்க வேண்டும்; அதாவது மோடிஜியிடம் இருந்து வாங்க வேண்டும். நமது நாட்டில் நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, இனி நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அனைத்து சுரங்கங்களும் அரசுக்கு சொந்தமானது. எனவே முன்பு இருந்த ஒன்றிய அரசு, சில சுரங்கங்களை ராஜஸ்தான் அரசாங்கத்திடமும், சில சுரங்கங்களை சத்தீஸ்கர் அரசாங்கத்திடமும், சில சுரங்கங்களை பஞ்சாப் அரசாங்கத்திடமும் கொடுத்து, அவற்றை அரசாங்கங்களே நடத்துமாறு செய்தது.
ஆண்டுக்கு ரூ.2800 கோடி நிலக்கரி அதானிக்கு இலவசம்
நாட்டின் மற்ற பகுதிகளிலும், மாநில அரசுகளிடம் மட்டுமே சுரங்கங்கள் உள்ளன. ஆனால் மோடிஜி அரசு அதானி விஷயத்தில் மட்டும் விதிவிலக்கு அளித்து, அதானிக்கு நிலக்கரி சுரங்கம் கொடுத்தது. மேலும், 4,000 கலோரிகளுக்கும் குறைவான நிலக்கரி, நிராகரிக்கப்பட்ட நிலக்கரியாக கருதப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. அதேசமயம், நிராகரிக்கப்பட்ட நிலக்கரியை அதானி நிறுவனம் இலவசமாகப் பெறவும் ஏற்பாடானது. ஆக, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 2800 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி அதானிக்கு இலவசம். அதாவது, மோடிஜியால் ஆண்டுக்கு 2800 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரி நமது சுரங்கங்களில் இருந்து இலவசமாக எடுக்கப்படுகிறது.
ஏழே ஆண்டில் 50 ஆயிரம் கோடி 11.5 லட்சம் கோடியானது...
2014இல் அதானிஜி, அதாவது மோடிஜியின் சொத்து 50,000 கோடி. 7 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது சொத்து 11.5 லட்சம் கோடியாக மாறியது. மோடி ஜி, இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு எங்கு செல்வீர்கள்? 11.5 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து. 7 வருடங்களில் உங்கள் நாட்டை இவ்வளவு கொள்ளையடித்து விட்டீர்களே! 2014 இல், 609 ஆவது இடத்தில் இருந்த அவர், தற்போது இரண்டாவது பெரிய பணக்காரராக மாறியுள்ளார். இப்போது அவர் முதல் பணக்காரர் ஆக விரும்புகிறார். எனவே, பொதுமக்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நீங்கள் ஜிஎஸ்டி கொடுங்கள். உங்கள் குழந்தைகளின் வயிற்றை அறுத்து வரி, பால், தயிர், அனைத்திற்கும் ஜிஎஸ்டியை கட்டுங்கள். அந்த ஜிஎஸ்டி பணம் எங்கே செல்கிறது? அந்தப் பணம் மக்களின் கருவூலத்துக்குச் செல்கிறது. அது அங்கிருந்து அதானியின் கருவூலத்திற்கும் அங்கிருந்து மோடிஜியின் கருவூலத்திற்கும் செல்கிறது. நாடு முழுவதும் இரு கைகளாலும் சூறையாடப்படுகிறது.
பிரதமர் நாடு முழுவதையும் கொள்ளையடித்து வருகிறார். மோடி ஜி தனது இரு கைகளாலும் கொள்ளையடிக்கிறார். நிலக்கரியை கொள்ளையடிக்கிறார், விமான நிலையங்களை கொள்ளையடிக்கிறார், சாலைகளை கொள்ளையடிக்கிறார், மின்சாரத்தை கொள்ளையடிக்கிறார், தண்ணீரை கொள்ளையடிக்கிறார். அவர் எதையும் விட்டு வைக்கவில்லை. அனைத்தையும் கொள்ளையடித்து வருகிறார். 75 ஆண்டுகளில் இல்லாத அளவை காட்டிலும் 10 மடங்கு அதிகமாக கொள்ளையடித்துள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டை இவ்வளவு கொள்ளையடித்த ஊழல் பிரதமர் யாருமே இல்லை. மோடிதான் அத்தகைய பிரதமர் என்று நினைக்கிறேன்.
நன்றி தீக்கதிர்!