ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். வட இந்தியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் இந்த பண்டிகையானது வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை ஊற்றியும் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மார்ச் 24,25 ஆகிய தேதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்த சூழலில் கிழக்கு டெல்லியின் பாண்டவ் நகரில் வசிக்கும் 4 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியில் டியூசன் சென்று வந்துள்ளார். அப்போது சிறுமி கடந்த 24-ம் தேதியும் டியூசன் சென்றதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் டியூசன் ஆசிரியரின் சகோதரர் சிறுமியை தனியாக அழைத்து சென்று அத்துமீறியுள்ளார். மேலும் சிறுமியை கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டவும் செய்துள்ளார். உடல்களில் இரத்த காயங்களுடன் அழுதுகொண்டே வீட்டுக்கு திரும்பிய சிறுமியை கண்டு அதிர்ந்த பெற்றோர், விசாரித்துள்ளனர். அப்போது அழுதுகொண்டே தனது மழலை மொழியால் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனே இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தனர்.
மேலும் சாலை மறியலில் ஈடுபட்டு நீதி கேட்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை AIIMS மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குற்றவாளியான அர்மான் (34) என்ற நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.