கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி பிற்பகல் நேரத்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தென் மாநிலங்கள் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பெங்களூரு போலீசார் விசாரணை மேற்கொள்கையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதையடுத்து அந்த மர்ம நபர் குறித்து தகவல் தெரிவித்தால், தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த வழக்கு NIA தற்போது விசாரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்தது.
எனினும் குற்றவாளி இன்னும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் வெடிகுண்டு வைத்துள்ளார் என்று ஒன்றிய அமைச்சர் நேற்று பேசியது கண்டனங்களை எழுப்பிய நிலையில், தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதாவது பெங்களுருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஒன்றிய இணையமைச்சர் ஷோபா (Shobha Karandlaje) இதுகுறித்து பேசியிருந்தார். அப்போது பேசிய அவர், “குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தான்” என்றார். மேலும் டெல்லியிலிருந்து வருபவர்கள், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ எனவும் கேரளாவிலிருந்து வருபவர்கள் இங்குள்ள ‘மக்கள் மீது ஆசிட் வீசுகின்றனர் என்றும் சர்ச்சைக்கருத்தை தெரிவித்தார்.
ஒன்றிய அமைச்சரி ஷோபாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து அவர் மீது NIA விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், வெறுப்புணர்வை விதைக்கும் விதமாக தவறாக பேசியதற்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்துக்கு ஒன்றிய அமைச்சர் ஷோபா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “எனது கருத்தால் தமிழ்நாட்டில் யாரேனும் காயமடைந்திருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இவர் மீது மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் மீது தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.