புதுச்சேரி வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் லோகநாதன் (44). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் நேற்றைய முன்தினம் இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் இவரது வீட்டிற்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே சென்றுள்ளார். இதனை கண்ட பக்கத்து வீட்டுக்காரர், உடனடியாக லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் விரைந்து வந்த லோகநாதன் வீட்டை சென்று பார்க்கையில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு பதறிப்போன அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 சவரன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போயிருந்தது தெரியவந்து. இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற லோகநாதன் போலீசில் புகார் அளிக்க எண்ணினார்.
அந்த சமயத்தில் லோகநாதன் வீட்டில் கொள்ளையடித்து சென்ற நபர், மீண்டும் அதே வழியில் சென்றதை அப்பகுதி மக்கள் கண்டனர். இதையடுத்து அந்த நபரை வேகமாக ஓடிச்சென்று பிடித்த அப்பகுதியினர், அவருக்கு தர்ம அடி கொடுத்து வில்லியனுார் போலீசில் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் விசாரணையில் அந்த நபர் கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டை சேர்ந்த அறிவழகன் (32) என்பதும், இவர் மீது கோட்டக்குப்பம், ஆரோவில் மற்றும் நெல்லிக்குப்பம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
மேலும் இந்த திருட்டு வழக்குகளில் ஒன்றில் விழுப்புரம் காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டு வரும் வருவதும், அப்படி காவல் நிலையத்தில் கையெழுத்திட செல்லும்போதெல்லாம் ஆங்காங்கே திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளது கண்டறியப்பட்டது. அப்போதுதான் லோகநாதன் வீட்டிலும் திருடியுள்ளார் குற்றவாளி அறிவழகன்.
அப்படி திருடி சென்ற திருடன் அறிவழகன், அன்றிரவே கொள்ளையடித்த பணத்தை வைத்து மது குடித்ததும், அந்த போதை தலைக்கேறியதும் எங்கு செல்லுவது என தெரியாமல் சிறிது நேரத்தில் மீண்டும் திருடிய வீட்டிற்கே சென்றபோது சிக்கிக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட திருடன் அறிவழகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் இருந்து திருடிய நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். குடிபோதையில் திருடிய வீட்டிற்கே மீண்டும் வந்த திருடனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ள சம்பவம் புதுச்சேரியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.