2018 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிமுகம் படுத்திய தேர்தல் பத்திரம் முறையை அண்மையில் உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதை தேர்தல் ஆணையம் மார்ச் 13 ஆம் தேதிக்குள் தங்களது இணையத்தில் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் ஆனால் SBI வங்கி தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஜூன் மாதம் வரை கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது SBI தொடர்ந்த வழக்கை ரத்து செய்து, 12-ம் தேதி மாலைக்குள் விவரங்களை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், "தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் கடந்த 26 நாட்களாக எஸ்.பி.ஐ என்ன செய்துகொண்டிருந்தது? கடந்த 26 நாட்களில் 10,000 தகவல்களையாவது சேகரித்திருக்கலாமே? நாட்டின் மிகப்பெரிய வங்கியால் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை விரைவில் சேகரித்து வழங்க இயலாதா? 2019ல் இடைக்கால உத்தரவு பிறப்பித்த போது, sealed cover-ல் வழங்கப்பட்ட ஆவணங்களை அப்படியே தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டியது தானே? தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில், தீர்ப்பில் கூறப்பட்டதை அப்படியே செயல்படுத்த வேண்டியதுதானே?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் SBI ஒப்படைத்துள்ளது. இதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பத்திர விவரங்கள் மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.