விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்களின் சமூக வலைதள பக்கங்களையும், விவசாயிகளின் கோரிக்களுக்காக ஆதரவாக வலியுறுத்தும் X கணக்குகளையும் முடக்க பா.ஜ.க அரசு சட்டத்தை பயன்படுத்தி ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, எலன் மஸ்கின் X நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
ஒன்றிய அரசின் விவசாய விரோத போக்கை உலக மக்களுக்கு தெரியப்படுத்துவதில் சமூக வலைதளங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. அதில் மிக முக்கியமான பங்கை X-வலைதளமான (twitter) வகிக்கிறது.
அதன் அடிப்படையில், விவசாய அமைப்புகளை சார்ந்தவர்களும், விவசாய வல்லுநர்களும், பொது மக்களும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பான காணொளிகளை X வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அத்தகைய சூழலில், விவசாயிகள் பேரணி சார்ந்த பதிவுகளை பகிர்ந்த முக்கிய வலைதள கணக்குகளை முடக்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க.
இது குறித்து X குழுமத்தின் அதிகாரப்பூர்வ கணக்கு (Global Government Affairs) வெளியிட்ட செய்தி குறிப்பில், “ஒரு குறிப்பிட்ட நிகழ்வு (விவசாயிகள் போராட்டம்) தொடர்பாக பதிவிடும் அனைத்து கணக்குகளையும் முடக்க, சட்டப்படி கோரிக்கை விடுத்துள்ளது இந்திய அரசு.
அவர்களின் கோரிக்கை கருத்துரிமைக்கு எதிராக இருப்பதால், அதில் எங்களுக்கு உடன்பாடில்லை. எனினும், அவர்கள் சட்ட வரையறைப்படி அணுகியுள்ளதால், அதனை எங்களால் மறுக்க இயலவில்லை. மேலும், இந்த வலைதள கணக்குகளின் முடக்கமானது இந்தியாவில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இக்கணக்குகளுக்கு தடையில்லை” என தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஒன்றிய அரசின் கருத்துரிமைக்கு எதிரான அரசியல், இந்தியாவை கடந்து உலக நாடுகளுக்கும் தெரியவந்துள்ளது. இதுவரை உலக அளவில் சுமார் 30 இலட்சம் மக்கள் இப்பதிவை பார்த்து இருக்கின்றனர். மோடியின் ஆட்சியை பார்த்து உலகமே வியக்கிறது என்று இரு தினங்களுக்கு முன்புதான் அமித்ஷா பேசி இருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.