மத்திய பிரதேச மாநிலத்தின் மண்ட்சுர் என்ற பகுதியில் 7 வயதான சிறுமி ஒருவரை ஒரு கும்பல் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பின்னர் படுகாயங்களுடன் அந்த பகுதியில் இருந்த சிறுமிகளை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அச்சிறுமி மற்றும் அவரின் சகோதரியின் கல்விச்செலவை ஏற்பதாக மாநில பாஜக அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து அந்த சிறுமிகளுக்கு அரசு சார்பில் கடிதம் அளிக்கப்பட்டு அங்குள்ள பள்ளி ஒன்றில் சிறுமிகள் படித்து வந்தனர். அந்த இரு சிறுமிகளுக்கும் முதல் ஆண்டு மட்டும் அரசு கட்டணம் செலுத்திய நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்துள்ளது.
அதன் காரணமாக சிறுமிகள் படித்த பள்ளி நிர்வாகம், இரண்டு சிறுமிகளுக்கும் சேர்த்து ரூ.14 லட்சம் கட்டணம் செலுத்தாமல் இருப்பதாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், அந்த மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் என்று யாரும் சொல்லவில்லை என மாவட்ட கல்வி அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
இது குறித்த செய்த ஊடகங்களில் வெளிவந்த நிலையில், மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இலவச கல்வி கொடுப்பதாகச் கூறிய அரசு தற்போது கட்டணத்தை கட்டாமல் விட்டு இருப்பது தவறான செயல் என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக தலைமை செயலாளர், கல்வித்துறை முதன்மை செயலாளர், மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.