டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என ஒன்றியத்தில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க பல சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதில் ஒன்றுதான் டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு. இந்த வழக்கில்தான் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறை கைது செய்தது. இதே வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சிக்க வைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது.
சமீபத்தில் கூட டெல்லி ஆட்சியை கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் ரூ.25 கோடி பா.ஜ.க பேரம் பேசியுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று என்னை பா.ஜ.கவில் சேரும் படி கட்டாயப்படுத்துகிறோர்கள் என மற்றொரு குற்றச்சாட்டை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்துள்ளார்.
இன்று டெல்லியில் புதிய பள்ளி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், " பா.ஜ.கவில் சேர்ந்து விடுங்கள். உங்களை விட்டு விடுகிறோம் என என்னிடமே கூறுகிறார்கள். ஆம் ஆத்மி கட்சி ஒருபோதும் பா.ஜ.கவிற்கு தலைவணங்காது.
பள்ளிகளைக் கட்டியதால் மனிஷ் சிசோடியாவை சிறையில் அடைத்தார்கள். இலவச மருத்துவ சிகிச்சையை கொண்டு வந்ததால் சத்யேந்தர் ஜெயினை சிறையில் அடைத்தார். ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுப் பிரிவுகள் உள்ளிட்ட மத்திய அமைப்புகள் களமிறங்கியுள்ளன. நீங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தாலும் புதிய பள்ளிகள், மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் பணிகளை தடுத்து நிறுத்தமுடியாது" என தெரிவித்துள்ளார்.