மதம், சாதி சார்பற்ற கலப்பு திருமணங்கள் செய்யும் இணையர்களை பெற்றோர்களே கொல்லும் அவலம், இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாஜக ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் அதிகப்படியாக நடந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் கூட உத்தரப் பிரதேசத்தின் பதாவுன் நகரில், 19 வயது பெண்ணையும், 20 வயது ஆணையும் ஆணவக் கொலை செய்த செய்தி நாட்டையே உலுக்கியது. இருவரும் ஒரே சாதி என்ற போதும் கூட, ஈன்ற மக்களை கொலை செய்யும் அளவிற்கு பெற்றோர் சென்றது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.
இந்நிலையில் மதக் கலப்பு திருமணம் செய்த 8 இணையர்கள் பாதுகாப்பு கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 8 இணையர்களில், 5 இஸ்லாமிய ஆண் - இந்து பெண் இணையர்கள் மற்றும் 3 இஸ்லாமிய பெண் - இந்து ஆண் இணையர்கள் என the bar and bench ஊடகம் பதிவிட்டுள்ளது.
இதற்கான அலகாபாத் உயர்நீதிமன்ற அமர்வில், நீதிபதி சாரல் சிரீவஸ்தவ், “இணையர்கள் எவரும் உத்தரப் பிரதேச மதமாற்றத் தடை சட்டத்தை பின்பற்றவில்லை. ஆகவே, இவர்கள் தொடர்ந்துள்ள வழக்குகள் விசாரணைக்குட்பட்டதல்ல,” எனக் காரணம் கூறி, பாதுகாப்பு தர மறுத்துள்ளார்.
எந்த நிலையில் அவர்கள் சட்டத்தை பின்பற்றவில்லை என வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், ஒன்றன் பின் ஒன்றாக, ஜனவரி 10 - 16 க்கு உட்பட்ட நாட்களில் பாதுகாப்புக் கோரிய அனைத்து இணையர்களுக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார் என்ற செய்தி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் மதமாற்றத் தடை சட்டத்திற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில், அதனை அடிப்படையாக வைத்து இணையர்களின் பாதுகாப்புக்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.