நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.
அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்து நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கியது.
அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரண் லேண்டர் வெற்றிகரமான நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இந்த சாதனையைத் தொடர்ந்து அடுத்ததாக இஸ்ரோ அமைப்பு சூரியனை ஆய்வு செய்ய குறிவைத்து ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
இந்த நிலையில் ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் சென்சார் பாகங்கள் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 1-ம் தேதி எல்-1 எனும் சுற்றுப் பாதையில் ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக நிறுத்தப்ப்பட்ட நிலையில், தற்போது அதன் மேக்னடோ மீட்டர் சென்சார் பாகங்கள் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காந்தப்புலத்தை அறிவதற்காக பொருத்தப்பட்டிருந்த 6 மீட்டர் மேக்னடோ மீட்டர் தற்போது வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த கருவி சூரியனின் காந்தப்புலத்தை அளவிடும். அதன்படி, 132 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த மேக்னடோமீட்டரின் ஆண்டனாக்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதிலுள்ள 2 சென்சார்களும் நல்லநிலையில் ஆய்வை தொடர்கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.