இந்தியாவின் அனைத்து தேசிய திட்டங்களுக்கும், சுகாதார மையங்களுக்கும், இந்தியில் பெயர்மாற்றம் செய்து வருகிறது பாஜக. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் எத்தனை முறை சொன்னாலும் தன்னுடைய நார்சிச போக்கை சற்றும் மாற்றாமல் தொடர்கிறது ஒன்றிய பாஜக அரசு.
லடாக், இமயத்தில் இருக்கும் ஒன்றியப் பகுதி ஆகும். பல பழங்குடி சமூகங்களை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதி இது. மலைப் பாலைவனம் என அழைக்கப்படும் லடாக் பகுதியில் அதிகப்படியாக லடாக்கி, திபெத்தியன் மொழிகளே புழக்கத்தில் உள்ளன.
இந்தியா, இந்துத்துவா, இந்தி ஆகியவற்றுக்கு எதிரான போக்குகள் இருக்கும் இடங்களில் மூக்கை நுழைத்து நாசம் செய்ய முயலுவதுதான் ஒன்றிய பாஜக அரசின் வேலை. இறுதியில் என்னவோ அந்த மூக்கு உடைந்து போவதுதான் வழக்கமாக இருக்கிறது. ஆனாலும் கூச்சம் கொள்வதே இல்லை பாஜகவின் மூக்கு!
லடாக்கின் சுகாதார மையங்களுக்கு சமீபத்தில், ஒன்றிய பாஜக அரசு இந்தியில் பெயர்மாற்றம் செய்திருப்பது, அம்மக்களிடையே பரவலான எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. புத்தமத குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கட்பிரிவுகள், பெயர்மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. வேறு வழியின்றி, தற்போது பெயர்மாற்றத்தை திரும்பப்பெற முன்வந்துள்ளது பாஜக.
பாஜக வேண்டி விரும்பி பெற்ற எண்ணற்ற மூக்குடைப்புகளில் இதுவும் ஒன்று.
சமீபத்தில் கூட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், நான் IPC என்றுதான் கூறுவேன். காரணம், எனக்கு இந்தி தெரியாது. தெரியாத மொழியில் வழக்காட விரும்பவில்லை,” என தெரிவித்திருந்தார்.
IPC, CrPC, IEA ஆகிய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்ஷ சன்ஹிதா, பாரதிய சாக்ஷ்யா என பெயர்களை கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக மாற்றியது குறிப்பிடத்தக்கது.
இவை அல்லாமல், ஒன்றிய அமைச்சகங்களுக்கும், ஆயுஷ் (உள்நாட்டு மருத்துவம், ஓகம்), ஜல் சக்தி (நீர் வளம்), பஞ்சாயத்தி ராஜ் (ஊராட்சி) என பெயரிட்டுள்ளது ஒன்றிய பாஜக. இந்நிலை, கல்வியிலும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தொடர்கிறது.
UPSC போன்ற இந்தியப் பணிக்கான தேர்வு முறைகளில், முன்பு இருந்த தமிழ் தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே கேள்வித்தாள்கள் உருவாக்கப்படுகின்றன. வரும் காலத்தில், ஆங்கிலமும் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
இந்திக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து அதை திணிக்க முயன்று வரும் பாஜகவுக்கு, 1930-களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்த பேரெழுச்சியை நினைவுபடுத்த வேண்டிய தேவை அதிகரித்து வருகிறது.