டெல்லியை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு 5 வயதில் மகன் உள்ளார். இந்த சூழலில் இந்த சிறுவனுக்கு இரத்த புற்றுநோய் இருந்துள்ளது. எனவே அவரை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிறுவனுக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை. ஒருகட்டத்தில் இனி சிறுவனை காப்பாற்ற இயலாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்து இருந்த அந்த தம்பதி, கோயில் கோயிலாக சென்று வந்துள்ளனர். அப்போது சிலர் கங்கை நதியில் சிறுவனை மூழ்கி எடுத்தால், அதிசயம் நடக்கும் என்றும், இந்த நோய் குணமாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை அந்த தம்பதியும் நம்பி, தங்கள் குழந்தையை நேற்று உத்தரகாண்ட்டின் ஹரித்வாரில் உள்ள ஹர்-கி-பவுரியிக்கு (கங்கை நதிக்கு) அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அவர்களுடன் மற்றொரு பெண்ணும் வந்துள்ளது. அந்த சமயத்தில் அந்த குழந்தையை அந்த பெண் நதியில் மூழ்கி எடுக்க, தாய் அருகிலேயே நின்று மந்திரம் ஓதிக்கொண்டிருந்துள்ளார். ஆனால் அந்த பெண் சிறுவனின் தலையை தண்ணீரில் இருந்து நீண்ட நேரம் வெளியே எடுக்காமல் இருந்ததை உணர்ந்த நபர், கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இருப்பினும் அந்த பெண் சிறுவனை நீரில் இருந்து வெளியே எடுக்காமல் சரியாகி விடும் என்று கூறி கொண்டே நீரில் மூழ்கடித்தபடியே இருந்துள்ளார். ஆனால் அந்த நபரின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தர்கள் உடனே சிறுவனை மீட்டனர். தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிறுவனின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த சிறுவன், நீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறி இறக்கவில்லை என்று மருத்துவர் தரப்பு தெரிவித்த நிலையில், இது சந்தேக மரணமாக கருதி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அனைத்தும் நபர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி கண்டனங்களை எழுப்பி வருகிறது.
இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனை காப்பாற்றி விடலாம் என்று மூடநம்பிக்கையால் கங்கை நதியில் 5 நிமிடமாக நீரில் மூழ்கியெடுத்த பெற்றோர் செயலால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.