உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தி பகுதியில் 16-ம் நூற்றாண்டைத் சேர்ந்த பாபர் மசூதி இருந்தது. ஆனால் அந்த இடத்தில்தான் இராமர் பிறந்ததாகவும், அதனை திரும்ப இந்துக்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மக்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட வைத்தார்கள். மேலும் அது பெரிய கலவரமாக மாறி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., போன்ற இந்துத்வ அமைப்புகள் அதனை இடித்தனர்.
இந்த சம்பவத்தில் பல மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அங்கே இராமர் இருந்ததாகவும், அதனால் அங்கே இராமர் கோயில் கட்டப்போவதாகவும் பாஜக தெரிவித்திருந்தது. இந்த சூழலில் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்ட அனுமதித்து 2019-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அடுத்த ஆண்டே கொரோனா பேரிடரின்போது அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் இராமர் கோயிலின் பணிகளை பாஜக அரசு மேற்கொண்டது.
தொடர்ந்து தற்போது இந்த கோயிலின் கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக ஒன்றிய பாஜக அரசு நேற்று (22.01.2024) இதன் திறப்பு விழாவை நடத்தியுள்ளது. இதில் பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் தங்களுக்கு கோயிலை விட கல்வியே முக்கியம் என்று சிறுவன் ஒருவர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் நிருபர் சிறுவனிடம் கோயில் வேண்டுமா ?என்று கேட்கும்போது சிறுவன் "எங்களுக்கு பள்ளிதான் வேண்டும்" என்கிறார்.
மேலும் சிறுவன் பேசியதாவது, “எங்களுக்கு கோயிலை விட பள்ளியே முக்கியம். எங்களுக்கு கடவுள் வேண்டாம். நாங்கள் எங்கள் ஆசிரியர்கள், பெற்றோர்களை நாங்கள் வணங்குறோம். எங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் தேவையில்லை.
நான் ஐ.ஏ.எஸ் படிக்க விரும்புகிறேன். அதனால் கோயிலுக்கு செல்வதை விட பள்ளிக்கு செல்வதை விரும்புகிறேன். நான் பள்ளிக்கு செல்வதால்தான் இவ்வாறு தைரியமாக புத்திசாலித்தனமாக பேசுகிறேன். நான் கோயிலுக்கு சென்றால், ரூ.2, ரூ.4-ற்காக பிச்சை எடுத்திருப்பேன். அப்புறம் என்ன நடந்திருக்கும்?
நான் ஒருபோதும் கோயிலுக்கு செல்ல மாட்டேன். கோயிலுக்கு சென்று நேரத்தை வீணடிப்பதை விட, பள்ளிக்கு சென்று எதையாவது புதிதாக கற்றுக்கொள்வேன். அம்பேத்கர் அரசியலைப்பு சட்டம், இடஒதுக்கீடு, உரிமைகள் என எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். ஆனால் இராமர் என்ன கொடுத்தார்?
நாங்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்களாகவே இருக்கிறோம். அவர்கள் ஒன்றும் மற்றவர்கள் கூறுவது போல் பயங்கரவாதிகள் அல்ல. நான் ஐ.ஏ.எஸ் ஆனதும் சமூக சேவை செய்ய விரும்புகிறேன்.”