நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்றப் பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்த வேண்டும் என்பது, அடிப்படையில் ஜனநாயக விரோதமானது; மற்றும் அரசமைப்புச்சட்டத்தில் அளிக்கப் பட்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயக முறையின் ஆணிவேரையேத் தகர்த்திடும் செயலுமாகும்.
அரசமைப்புச் சட்டம் சொல்வது என்ன?
மக்களவைக்கும், மாநில சட்டமன்றப் பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒன்றிய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் முறையே நாடாளுமன்றம்/சட்டமன்றங்களுக்குப் பதில் சொல்லவேண்டும் என்கிற அரசமைப்புச்சட்ட விதிமுறையை சிதைத்திடும். அரசமைப்புச் சட்டத்தின் 75(3)ஆவது பிரிவு, நாடாளுமன்றம்/சட்ட மன்றத்திற்குப் பதில் சொல்வதற்கு அமைச்சர்கள் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது. அதே போன்றே 164(1)ஆவது பிரிவு, மாநிலங்களில் ஆளும் அமைச்சர்கள் மாநில சட்டமன்றங்களுக்குப் பதில் கூற கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று வரை யறுக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின்படி, ஓர் அரசாங்கம், நாடாளுமன்றம்/சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றம்/சட்டமன்றத்தின் நம்பிக்கையை இழந்தாலோ அல்லது நிதிச் சட்டமுன்வடிவு தோற்க டிக்கப்பட்டாலோ, அந்த அரசாங்கம் ராஜினாமா செய்யக் கடமைப்பட்டதாகும். மாற்று அரசாங்கம் அமைக்கப்பட முடியவில்லையெனில், மக்களவை/சட்டமன்றம் கலைக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பதவிக் காலத்தை நீட்டித்தால், சட்ட விரோதம்
மக்களவைக்கோ அல்லது மாநில சட்டமன்றங்க ளுக்கோ பதவிக்காலம் எதுவும் நிர்ணயிக்கப்பட வில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 83(2) மற்றும் 172(1) ஆகியவை மக்களவை மற்றும் மாநில சட்டமன்றப் பேரவையின் ஆட்சிக் காலம், அவை ஏதேனும் கார ணங்களுக்காக முன்னதாகவே கலைக்கப்படாமல் இருந்தால், ஐந்தாண்டுகளாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கின்றன.
மக்களவை அல்லது மாநில சட்டப் பேரவைகளின் ஆட்சிக் காலத்தை நீட்டிப்பதற்கு ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அது அரசமைப்புச்சட்டத்தி ற்கு எதிரானது மட்டுமல்ல, ஜனநாயக விரோதமானது மாகும். மக்கள் பிரதிநிதிகள் மூலமாக மக்களின் விருப் பமே எப்போதும் மேலோங்கி இருக்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான முயற்சி
ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற நோக்குடன் அரசமைப்புச் சட்டத்தை திருத்துவ தற்காகப் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டி ருக்கின்றன. நிதி ஆயோக் இது தொடர்பாக அளித்தி ருக்கும் பரிந்துரை என்னவெனில், மக்களவையைக் கலைப்பதைத் தவிர்க்க முடியாத பட்சத்தில், மீதம் உள்ள மக்களவையில் ஆயுள் காலம் குறைவான தாக இருந்தால், அந்தக் காலத்திற்கு, ஆட்சி அதிகா ரத்தை மேற்கொள்வதற்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நாடு முழுதும் அமல்படுத்துவதற்கு ஏது வாக ஒரு ஷரத்து உருவாக்கப்படலாம் என்பதாகும். அடுத்து தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி அமை யும் வரை அவரால் நியமனம் செய்யப்படும் அமைச்சர வையின் மூலம் நாட்டில் நிர்வாகம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதாகும். இத்தகு அடாவ டித்தனமான முன்மொழிவு, குடியரசுத் தலைவரை ஆட்சி புரிபவராக மாற்றுகிறது. இது கொல்லைப்புற வழி யாக, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வரும் செயலாகும்.
சட்டமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்யும் உரிமை மீதான தாக்குதல்
இதுதொடர்பாக மற்றொரு பரிந்துரை என்ன வெனில், அவை கலைக்கப்படும் நேரத்தில், எஞ்சியி ருக்கும் காலம் நீண்டதாக இருப்பின், புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டு, மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே அவை இருந்திடும். அதாவது, அதன் ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு, அவை கலைக்கப் படுகிறது என்றால், அடுத்த தேர்தல், மூன்று ஆண்டு காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். எனவே உண் மையில் மக்களவை தேர்தல்கள் அடிக்கடி நடக்கும். இது நோக்கத்தை தோற்கடிக்கும்.
அதற்காகவே ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான முயற்சிகளின் காரணமாக ஏற்படக்கூடிய மற்றொரு பாதிப்பு கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலா கும். 2015 நாடாளுமன்ற நிலைக் குழுவின் 79ஆவது அறிக்கை மற்றும் நிதிஆயோக் அமைப்பின் ஆவ ணம் ஒன்று, அளித்துள்ள முன்மொழிவு என்னவெனில், சில சட்டமன்றங்களின் ஆயுளை நீடிப்பது, அல்லது சில வற்றின் ஆயுளை வெட்டிக் குறைப்பது ஆகும். இவ் வாறே ஒரு சட்டமன்றத்தின் ஆயுளை நீட்டிப்பதோ, அல்லது குறைப்பதோ, இவ்விரண்டுமே மாநிலங்க ளின் உரிமைகள் மீதான தாக்குதலாகும். அம்மாநில மக்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்திடும் உரிமைகள் மீதான தாக்குதலுமாகும்.
மாநில சட்டமன்றங்களைப் பொறுத்தவரை முன் வைக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு பரிந்துரை என்னவெனில், ஒரு மாநில சட்டமன்றத்தின் ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு முன்பே அது கலைக்கப்படு மாயின், எஞ்சிய காலத்திற்கு அம்மாநிலத்தின் ஆட்சியை அம்மாநில ஆளுநரைக் கொண்டே நடத்திட வேண்டும் என்பதாகும். இதன்பொருள், இது, ஒன்றிய அரசாங்கத்தின் ஆட்சியைக் கொண்டு வருவதே தவிர வேறல்ல!
உரிமைகளைப் பறிக்கும் முன்மொழிவுகள்
நாடாளுமன்றம்/சட்டமன்றங்களின் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் விதத்திலும், ஆட்சியாளர்களின் பத விக் காலத்தை நீட்டிக்கும் விதத்திலும் எண்ணற்ற முன் மொழிவுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்திய சட்ட ஆணையத்தின் வரைவு பணித்தாள் உட்பட முன் மொழியப்பட்டுள்ள மற்றொரு ஆவணம், அவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் போது, அவைக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்ப தற்கான தீர்மானமும் அத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பதுமாகும்.
இதன் பொருள், உறுப்பி னர்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபந்தனையுடன் ஆட்சியிலிருப்பவர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்களின் எந்தவொரு அரசாங்கத்திற்கும் வாக்களிப்பதற்கான உரிமையை கட்டுப்படுத்த முடியாது, மேலும் அவையில் நிலை யான பெரும்பான்மையைக் கொண்ட ஆளும் கட்சிக்கு அவையைக் கலைத்து முன்கூட்டியே தேர்தலை நடத்த பரிந்துரைக்கும் உரிமையையும் குறைக்க முடியாது.
மாநில அரசுகளைக் கலைத்ததுதான் பிரச்சனை
மக்களவைத் தேர்தலுடன் இணைத்து, மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து முன்மொழிவுகளும், கூட்டாட்சித் தத்து வத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் மதிக்காத போக்கையே வெளிப்படுத்துகின்றன. முத லாவதாக, ஒன்றிய அரசாங்கம், அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவைத் தான்தோன்றித்தன மாக துஷ்பிரயோகம் செய்து, மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட பல மாநில அரசாங்கங்களைக் கலைத்த தன் விளைவாகவே, பின்னர் மக்களவைக்கும் பல மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர் தல்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
1959இல் கேரளாவில் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கம் கலைக்கப்பட்டதி லிருந்து இந்த செயல்முறை தொடங்கியது. ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்துவது என்ற பெயரில் முன்வைக்கப்படும் அனைத்து முன்மொழிவுகளும், ஆளுநரின் பங்களிப்பையும், அதன்மூலம் ஒன்றிய அரசாங்கத்தின் தலையீட்டையும் அதிகரித்திடும்.
இந்தியா எண்ணற்ற வேற்றுமைகளைக் கொண்ட ஒரு பரந்த நாடாகும். எனவே கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் ஜனநாயக அமைப்பே இங்கே நிலைத்து நிற்க முடியும். மாநிலங்களுக்குப் பல்வேறு கால கட்டங்களில் தேர்தல்கள் நடத்தப்படுவது கூட்டாட்சி அமைப்பு முறையின் ஓர் அம்சமாகும். எனவே, நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதற்காக, ஏதேனும் செயற்கை முயற்சி மேற்கொள்ளப்படுமானால் அதனை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முற்றிலுமாக எதிர்த்திடும். ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதென்பது, தற்போது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இருந்து வரும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்திடும் ஒன்றாகவே அமைந்திடும்.
நன்றி :- தீக்கதிர்.