குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய மதக் கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற பெண்மணியின் மொத்த குடும்பமும் அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் என்ற கிராமத்தில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது பில்கிஸ் பானு, 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரை, மதவெறியர்கள் ஈவு இரக்கமின்றி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும், இந்த கலவரத்தின்போது கொல்லப்பட்டனர். மேலும் பில்கிஸ் பானு படுகாயங்களுடன் உயிர்தப்பினார். பின்னர் இதுதொடர்பான வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி வழங்கிய தீர்ப்பில், பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
குறிப்பாக அப்போது கருவுற்ற பெண்ணை கூட்டுப்பாலியல் செய்தது, 3 வயது குழந்தையை கொலை செய்தது உள்ளிட்ட வழக்கிகளில் 34 ஆண்டுகள் தண்டணை விதிக்கப்பட்டது. தண்டணை பெற்ற குற்றவாளிகள் 10 முதல் 15 ஆண்டுகள் மட்டும் சிறை தண்டணை அனுபவித்த நிலையில், குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு அண்மையில் விடுதலை செய்ததது. பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
சமீபத்தில் கூட குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், குஜராத் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பில்கிஸ் பானு வழக்கில் கைதான 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, 11 குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, வழக்கு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், நாகரத்னா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "இன்று பில்கிஸ் பானு, நாளை யார்? அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். என்ன அடிப்படையில் அவர்களை விடுவித்தனர் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அதனை நீங்கள் காட்டாவிட்டால் நாங்கள் முடிவெடுக்கவேண்டியிருக்கும்" என்று காட்டமாக கூறி இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியது.
மேலும் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கொள்கை அடைப்படையில் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரை மட்டும் விடுவித்தது எப்படி? மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களை 14 ஆண்டுகளில் விடுவித்த போது அதே அடிப்படையில் மற்ற கைதிகளை விடுவிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், (08.01.2024) அன்று 11 பேரின் விடுதலையையும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பின்வருமாறு :
* பில்கிஸ் பானு வழக்கின் விசாரணை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் 11 குற்றவாளிகளை விடுவிப்பதற்கான அதிகாரம் குஜராத் அரசுக்கு கிடையாது.
* பல உண்மைகளை மறைத்து மோசடி மூலம் நீதிமன்றத்தில் விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.
* பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிப்பதை அனுமதிக்க முடியுமா? என்பது முக்கிய பிரச்னை.
* பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
* குஜராத் மாநில அரசு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளது. இந்த அச்சம் காரணமாகத்தான் வழக்கின் விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது.
* சட்ட விதிகளை மீறுவது சமத்துவத்திற்கான உரிமைகளை மறுப்பதாகும். சட்டத்தின் ஆட்சி என்பது சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்பதாகும்.
* ஜனநாயக நாட்டில் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும். இறக்கத்திற்கும், அனுதாபத்திற்கும் எந்த பங்கும் கிடையாது.
* 14 ஆண்டுகளில் குற்றவாளிகள் பலமுறை பரோல் மூலம் வெளியே வந்து விடுமுறை பலனை அனுபதித்துள்ளனர். அவர்கள் மீண்டும் சிறை செல்வது நியாயமானது.
* சட்டத்தை பின்பற்றாமல் நீதியை நிலை நாட்ட முடியாது. நீதி என்பது குற்றவாளிகளின் உரிமைகளை மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் உள்ளடக்கியது.
* குற்றவாளிகள் 11 பெரும் இன்னும் 2 வாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.
தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை - நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.
“நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.
நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் பில்கிஸ் பானு வழக்கில் ரேவதி லாலி, சுபாஷினி அலி, ரூப்ரேகா வர்மா ஆகியோர் கடைசி வரை போராடியுள்ளார். அவர்கள் யார் ?
ரேவதி லாலி :
பத்திரிக்கையாளரான ரேவதி லாலி, குஜராத் கலவரம் குறித்து, “The Anatomy of Hate” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். பில்கிஸ் பானு வழக்கில் முக்கிய மனுதாரர்களில் ரேவதி லாலியும் ஒருவர். பில்கிஸ் பானு வழக்கு குறித்து ரேவதி லாலி கூறுகையில், பில்கிஸ் பானுவுக்கு ஆதரவாக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடிவெடுத்தேன்.
அப்போது அந்த வழக்கில், சிபிஐ(எம்)-ன் சுபாஷினி அலி மற்றும் ருப்ரேகா வர்மா ஆகியோர் முக்கிய மனுதாரராக முன்னின்று நடவடிக்கைகளை மேற்கொள்வது தெரியவந்தது. இன்று இந்த வெற்றி சுபாஷினி அலியையே சாரும் என ரேவதி லாலி பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
தோழர் சுபாஷினி அலி :-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக உள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாதர் சங்க மூத்த நிர்வாகி என முன்னணி களப்பணியாளராக பணியாற்றி வருகிறார் தோழர் சுபாஷினி அலி.
ரேவதி லாலி, சுபாஷினி அலியை சுட்டிக்காடியதுமே அவரிடம் கேட்டபோது, பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டபோது, அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அதேநேரத்தில் பில்கிஸ் பானு இதுதான் நீதியின் முடிவா ? என்ற ஆதங்கத்தை கேள்வியாக தொடுத்தார். அவரின் ஆதங்கம் பெரும் மின்னலாய் தாக்கியது. அப்போதுதான் உணர்ந்தேன். பில்கிஸ் பானுவுக்காக உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்ட முடிவெடுத்தேன் என்றார்.
மேலும் தீர்ப்பு குறித்து பேசிய சுபாஷினி அலி, பல ஆண்டுகளுக்கு பிறகு அரசுக்கு எதிராக ஒரு துணிச்சலான தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பில் இன்னொன்றையும் உணரவேண்டும். பாதிக்கப்பட்ட எத்தனை பேர் இவ்வளவு நீண்டகால போராட்டத்தை நடத்த முடியும். உச்சநீதிமன்றத்தில் வாதிடமுடியும் என்ற கேள்வியை நீதியரசர்களிடம் வைத்துள்ளார் சுபாஷினி அலி.
பேராசிரியை ரூப்ரேகா வர்மா :-
லக்னோ பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பேராசிரியராக பணியாற்றியவர் ரூப்ரேகா வர்மா. இந்த வழக்கு குறித்து பேசிய ரூப்ரேகா வர்மா, 11 குற்றவாளிகளும் விடுதலை என்ற தீர்ப்பு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கியது. உண்மையான நீதி கிடைத்தாக வேண்டும் என்ற குறிக்கோள் மட்டுமே மேலோங்கியது.
இந்த வழக்கு தொடர்பாக என்னிடம் பல அழைப்புகள் வந்தது, என்னுடைய சகாக்கள் கபில் சிபல், விருந்தா குரோவர் மற்றும் இந்திரா ஜெய்சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தார்க்ள். தோழர்கள் சுபாஷினி அலி, ரேவதி லாலி ஆகியோருடன் பொது நல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.
இதில் சுபாஷினி அலியை தவிர ரேவதி லாலி, ரூப்ரேகா வர்மா ஆகியோர் பில்கிஸ் பானுவை தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை. காரணம் பில்கிஸ் பானுவை தொந்தரவு செய்ய அவர்கள் விரும்பவில்லை.
பெண் அரசியல்வாதி, பேராசிரியர், பத்திரிகையாளர் என மூன்று பெண் ஆளுமைகள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெற்றியை உறுதி செய்துள்ளார்கள். ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில் பில்கிஸ் பானு வெற்றி பெற்றார்.