நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் விளக்கம் கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு விளக்கம் கொடுக்க மறுக்கும் ஒன்றிய அரசு கேள்வி கேட்ட 146 எம்.பிக்களை இந்த கூட்டத் தொடர் முழுவதும் இடை நீக்கம் செய்தது.
இதைக் கண்டித்து இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திர்ணாமூல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை சபாநாயகர் ஜக்தீப்தன்கத்தை விமர்சிக்கும் விதமாக மிமிக்கிரி செய்துள்ளார்.
இதையடுத்து கல்யாண் பானர்ஜியின் கேலி பேச்சுக்கு குடியரசு தலைவர் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பல ஊடகங்கள் எதிர்க்கட்சி எம்.பிக்களின் இடைநீக்கத்தை பற்றி பேச மறுத்து கல்யாண் பானர்ஜியின் கேலி பேச்சை பெரிதாக்கின. இதற்கு ஊடகங்கள் உண்மை தெரியாமல் மிமிக்கிரி பிரச்சனையை விவாதித்து வருகிறது என ராகுல் காந்தி பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை தலைவ மான ஹமீது அன்சாரியை பிரதமர் மோடி கேலி செய்யவில்லையா? என ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் x சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”இந்தியாவின் குறிப்பிடத்தக்க ராஜதந்திரிகளில் ஒருவரான ஹமீது அன்சாரி குடியரசு துணைத் தலை வர் மற்றும் மாநிலங்களவை தலைவராக 10 ஆண்டுகள் பணியாற்றி 2017 ஆகஸ்ட் 10 அன்று ஓய்வு பெற்றார். நாடாளுமன்ற அரங்கில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வின் பொழுது அவரை கேலி செய்யும் வகையில் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
அதாவது ஹமீது அன்சாரியின் மத அடையாளத்தை குறிப்பிட்டு அன்சாரியின் அரசியல் சாதனைகள் அனைத்துமே அவரது மத அடையாளத்தால் மட்டுமே கிடைத்ததாக பேசினார். இப்படி ஒரு அவதூறு நிகழ்வை அரங்கேற்றிய பிரதமர் மற்றும் அவரை சார்ந்தோர் தற்போது அவமரியாதை குறித்து பேசுவது சந்தர்ப்பவாதம் மட்டுமே. மக்களவையில் நடந்த அத்துமீறல் சம்பவம் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் இடைநீக்கம் ஆகியவற்றிலிருந்து திசை திருப்பவே இவ்வாறு நடந்து கொள்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.