கர்நாடகா மாநிலம் முடிகெரே தாலுகாவில் உள்ள கேசவலு ஜோகண்ணனகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ருஸ்தி. 13 வயது சிறுமியான இவர் தராதஹள்ளி தொடக்கப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சிறுமி வழக்கம் போல் இன்று வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது செல்லும் போது திடீரென சாலையில் சுருண்டு விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுமியை எம்.ஜி.எம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பிறகு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகமாக மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது குறித்து மருத்துவ ரீதியான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.