'தலைக்கவசம் உயிர்கவசம்' என்ற வாசகம் அனைவருக்கும் பொருந்தும். வாகனங்களில் செல்வோர் தங்கள் உயிரை பாதுகாக்கும் விதமாக அதற்கு தேவையான பாதுகாப்பு கவசத்தை அணிய வேண்டும். பைக்கில் செல்வோர் ஹெல்மெட், காரில் செல்வோர் சீட் பெல்ட் உள்ளிட்டவை கட்டாயம் அணிய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்கள் உயிருக்கு மட்டுமின்றி அடுத்தவர் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே அதனை தடுக்கும் விதமாக பல்வேறு சட்டங்கள் இந்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல், அதி வேகமாக செல்வோர் உள்ளிட்டவை யாரேனும் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு மக்கள் சாலை விதிகளை மீறுவதால், அவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும் சிலர் இந்த தவறை மறுபடி மறுபடி செய்கின்றனர். இதனால் இந்தியா முழுவதுமுள்ள அந்தந்த மாநில அரசுகள் இதற்கு அண்மைக்காலமாக கெடுபிடி வைக்கின்றது. மேலும் யாரேனும் அதீத வேகத்தில் சென்றாலோ அல்லது சிக்னலை மதிக்காமல் சென்றாலோ அல்லது ஹெல்மெட் அணியாமல் ஏதேனும் சாலை விதிகளை மீறி சென்றாலோ அவர்களை அந்தந்த ட்ராபிக் சிக்னலில் இருக்கும் கேமராக்கள் காட்டி கொடுத்துவிடும். அதன்படி அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இதில் சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது. இதனால் பெரிதாக யாரும் தப்பிக்க இயலாது. தமிழ்நாட்டிலும் ஹெல்மெட், லைசன்ஸ் இல்லாமல் செல்வோருக்கு, சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இது கர்நாடகத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது கங்காநகர். இங்கு வசிக்கும் மாலா என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தனது ஸ்கூட்டியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார். அவ்வாறு அவர் செல்லும்போதெல்லாம் ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிகளை மீறியும் சென்றுள்ளார். இதனால் அவருக்கு ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்பட்டது.
அவ்வாறு விதிக்கப்பட்ட அபராதம் தற்போது ரூ.3.22 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. KA 04 KF 9072 என்ற பதிவு எண் கொண்ட அந்த வாகனம் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்போது, அதில் சென்ற நபர் சாலை விதிகளை மீறியுள்ளார். இதனை ஒவ்வொரு ட்ராபிக் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சி பதிவு செய்து, பொருத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்களைப் பயன்படுத்தி அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராத தொகையானது, அந்த வாகனத்தின் தொகையை விட அதிகமானதாகும். அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் மூலம் தெரிவிக்கப்படும். அவர் கட்ட தவறினால், அது மேலும் மேலும் சேர்ந்துகொண்டு போகும். இறுதியில் அந்த பெண் அபராதத்தை கட்டவில்லை என்றால், அதிகாரிகளால் வண்டி பறிமுதல் செய்யப்படும்.
தற்போது இந்த நபருக்கு இதுவரை சாலை விதிகளை 643 முறை மீறியதாக ரூ.3.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்களைப் பயன்படுத்தி வழங்கப்பட்டன. இந்த நிகழ்வால் தற்போது அந்த நபர் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் இளைஞர் ஒருவர் 146 முறை ஹெல்மெட் அணியாமல் டிராபிக் கேமராவில் சிக்கியதால் அவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒவ்வொரு முறையும் அபராதம் கட்டாமல் இருந்து வந்ததால், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அவரது பைக்கை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.