புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் இருக்கிறது என்று கூறும் பிரதமர் நரேந்திர மோடியால், நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. இதற்காக பிரதமர் வெட்கி தலை குனிய வேண்டும்.
காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சிறைப்பிடிப்பு சம்பவம் தொடர் கதையாகி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இலங்கையில் உள்ள இந்திய தூதரடன் பேசி 24 மணி நேரத்தில் வெளியே கொண்டு வருவோம், ஆனால் தற்போது மோடி ஆட்சியில் நாங்கள் இலங்கையோடு இனக்கமாக உள்ளோம் என கூறி வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தொடர் கதைக்கு ஒன்றிய அரசு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் பிரீபெய்ட் மின் மீட்டர் பொருத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியபோது நான் ஏற்கவில்லை. ஆனால் தற்போதையை பாஜக கூட்டணி அரசு பிரீபெய்ட் மின் மீட்டர் பொருத்துவதில் வேகம் காட்டி வருகிறது. இதற்கு ரூ. 380 கோடி மாநில அரசு செலவு செய்து பொருத்த உள்ளது. இதில் 30% கமிஷன் பெறப்படுகிறது.
பிரீப்பெய்டு மின் மீட்டர் பொருத்தப்பட்டால் எழைகளுக்கு 180 யூனிட் இலவசம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் விநியோகம் - இவை எல்லாம் ரத்தாகிவிடும். நாட்டில் எந்த மாநிலத்திலும் பிரீபெய்ட் மீட்டர் பொருத்தப்படவில்லை. ஆனால் ஒன்றிய பாஜக அரசு புதுச்சேரியில் பொருத்த துடித்து வருகிறது. இதை பற்றி முதலமைச்சர் ரங்கசாமி மௌனம் காக்கிறார். ஏன் அவர் பலவீனம் ஆகிவிட்டாரா ? என்று தெரியவில்லை.
புதுச்சேரியில் கொண்டு வரவுள்ள பிரீபெய்ட் மின் மீட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் புதுச்சேரியில் போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் மாணவர்களுக்கு முட்டை கொள்முதல் செய்ததில் ஊழல், மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல், இந்த ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவை காரணம் காட்டி இந்தியா கூட்டணி உடைந்து போன கூட்டணி என சொல்வது சரியில்லை. இது குறித்து எல்.முருகன் சொல்வது எந்த வித முகாந்திரமும் இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க ஒரு இடத்திலாவது தனித்து போட்டியிட்டு வெற்றி பெறட்டும் பார்க்கலாம். தமிழ்நாட்டிலே குப்பை கொட்ட முடியாத எல்.முருகன் அகில இந்திய அரசியல் பேசுகிறாரா ?" என்று கடுமையாக விமர்சித்தார்.