மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.கவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என பல கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன.
ஆனால் டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அனைத்து கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி பா.ஜ.க 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அன்றைய தினத்திலிருந்து ஐந்தாவது முறையாக மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்படுவார் என்ற பேச்சு அடிபட்டது.
ஆனால், பா.ஜ.க தலைமை மூச்சுவிடாமல் இருந்தது. மேலும் தம்மால்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்ற நம்பிக்கையில் சிவராஜ் சிங் சவுகானும் டெல்லி செல்லாமல் மத்திய பிரதேசத்திலேயே இருந்து வந்தார். அதோடு தேர்தலுக்கு முன்பு இருந்தே சிவராஜ் சிங் சவுகானுக்கும், பா.ஜ.க தலைமைக்கும் இடையே சின்ன சலசலப்பு இருந்து வந்தது.
இதற்குக் காரணம் மத்திய பிரதேச மாநிலத்தில் 18 ஆண்டுகளாக பா.ஜ.க தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும் எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லாமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அதோடு கொரோனா காலத்தில் இம்மாநில சுகாதாரத்துறை படுமோசமாக இருந்ததை இந்தியாவே பார்த்தது. மேலும் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் என பா.ஜ.க ஆட்சியில் நடந்த கொடூரங்கள் அதிகம். இதனால்தான் முதலமைச்சர் வேட்பாளராக சிவராஜ் சிங் சவுகானை முன்னிறுத்தாமல் பா.ஜ.க தேர்தலை சந்தித்தது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அப்போதே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இருந்தும் தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என இருந்துவிட்டார் சிவராஜ் சிங் சவுகான். இதை பயன்படுத்திக் கொண்டு முதலமைச்சர் போட்டிக்கு நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், கைலாஷ் விஜயவர்ஜியா உள்ளிட்டவர்களும் டெல்லி தலைமைக்கு தூது விட்டனர். இந்நிலையில் இவர்கள் எல்லோரையும் புறக்கணித்து விட்டு மத்திய பிரதேசத்தின் அடுத்த முதலமைச்சராக மோகன் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
2005ம் ஆண்டு முதல் முறையாக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட்டார். பிறகு 2008ல் புத்னி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாகவும், 2013ம் ஆண்டு மூன்றாவது முறையாகவும் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். 2018ல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இரண்டே ஆண்டில் கமல்நாத் அரசாங்கம் கவிழ்ந்தது. பிறகு 2020ம் ஆண்டு மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் நான்காவது முறையாக முதலமைச்சரானார்.
இந்த நிலையில் 2023ம் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதை அடுத்து 5வது முறையாக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை பா.ஜ.க தலைமை ஓரங்கட்டியுள்ளது. இதனால் மிகுந்த வருத்தத்தில் அவர் உள்ளார். அவரது ஆதரவாளவர்களும் அதிருப்தியில் உள்ளது. 8 ஆண்டுகளாக மத்திய பிரதேச மாநிலத்தின் முகமாக இருந்த சிவராஜ் சிங் சவுகானின் அதிகாரம் முடிவுக்கு வருகிறது.