இந்தியாவில் வாகனங்களுக்கான சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டனத்தை குறைக்க வேண்டும் மற்றும் சுங்கச்சாவடிகளையும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் உட்பட மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் குஜராத்தில் ஒன்றரை வருடமாக போலி சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது அம்பலமாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று இந்த மோசடி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளது.
குஜராத் மாநிலம் பாமன்போர் - கட்ச் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் ஒன்று தங்களுக்குச் சொந்தமான இடத்தில் சுங்கச்சாவடி அமைத்துள்ளது. இதற்காக நெடுஞ்சாலையில் பாதைகளை மாற்றி தாங்கள் அமைத்த சுங்கச்சாவடி வரை சாலை அமைத்துள்ளனர். மேலும் குறைந்த கட்டணத்தை வசூலித்து வந்துள்ளனர்.
இதனால் பலரும் இந்த சுங்கச்சாவடியைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இப்படி ஒரு சுங்கச்சாவடி செயல்படுவது குறித்து போலிஸார் உட்பட எந்த அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. இந்நிலையில்தான் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் திருப்பி மாற்று வாதையில் விடப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்துள்ளது.
இந்த புகாரை அடுத்து ஆய்வு செய்தபோதுதான் கடந்த ஒன்றரை வருடங்கலாக போலியாக சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. இதையடுத்து போலியாக சுங்கச்சாவடி நடத்தி வந்த அமிர்ஷி படேல், வனராஜ் சிங் ஜாலா, ஹர்விஜய் சிங் ஜாலா, தர்மேந்திர சிங் ஜாலா, யுவராஜ் சிங் ஜாலா உள்ளிட்ட 5 பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.