கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது அன்னசந்திரபாலயா. இங்கு இன்ஜினிரியங்காக இருக்கும் இளம்பெண் ஒருவர், கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியில் செல்வதற்காக இந்திரா நகரில் இருந்து ரேபிடோ (Rapido) ஆட்டோ ஒன்றை புக் செய்துள்ளார். அப்போது ஆட்டோ வந்ததும் அதில் ஏறியிருக்கிறார் அந்த பெண். இதையடுத்து சற்று நகர்ந்த பின், அந்த ஆட்டோ ஓட்டுநர், அந்த பெண்ணின் கையை தொட்டு, காலையும் தொட்டுள்ளார்.
இதனால் அதிர்ந்த அந்த பெண், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை, அந்த ஆட்டோ ஓட்டுநர் கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, இதுகுறித்து Rapido தளத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனமோ ஓட்டுநர் குறித்த எந்த விவரங்களையும் வழங்காமல் வெறுமனே மன்னிப்பு கேட்டுள்ளது.
இதையடுத்து இதுகுறித்து அந்த பெண்ணின் நண்பர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ரேபிடோ உதவுகிறது. அதனைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், பெங்களூரு போலீசார், தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகாரையும் பெற்றுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்கையில், அந்த ஆட்டோ எண், ஓட்டுநர் உள்ளிட்ட விவரங்களை சேகரித்தது. குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயர் எக்லஸ் உதின் லஸ்கர் ஆகும். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஓட்டுனரிடம் விசாரிக்கையில், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற Rapido-வில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, நிர்வாணமாக சாலையில் இழுத்து செல்லப்பட்ட விவகாரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று, Rapido பைக்கில் வீடு திரும்பிய பெண் சமூக ஆர்வலர் ஒருவருக்கும், பாலியல் தொல்லை நடந்துள்ளது.
அதற்கு முன்னதாக Rapido பைக் ஓட்டுநர், பைக்கில் செல்லும்போதே பெண்ணிடம் அத்துமீறியதால், அந்த பெண் ஓடும் வண்டியில் இருந்து குதித்தது தொடர்பான CCTV காட்சிகள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது போன்ற பல சம்பவங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.