ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. அதிலும் சமீப சில ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தற்போது வரை தாலிபான் அரசாங்கத்தை உலகின் பெரும்பாலான நாடுகள் ஏற்கவில்லை. இந்தியாவும் ஆப்கானிஸ்தானுக்கு உதவிகள் செய்து வந்தாலும், தாலிபான் அரசாங்கத்தை இதுவரை ஆதரிக்கவில்லை. எனினும் முந்தைய ஆட்சி காலத்தில் இந்தியாவில் செயல்பட்ட ஆப்கானிஸ்தான் தூதரகம் தாலிபன் ஆட்சிக்கு பின்னரும் செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக தாலிபான் அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த இரண்டு வருடங்களில் இந்தியாவிலுள்ள ஆப்கானிஸ்தான் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.அதனால், மிகவும் குறைந்த அளவிலான புதிய விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
அதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி டெல்லியிலுள்ள தூதரகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து டெல்லியிலுள்ள எங்களது தூதரகத்தை 23-11-2023 முதல் நிரந்தரமாக மூடும் முடிவை எடுத்திருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று அந்த தூதரக செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .