உத்தரபிரதேச மாநிலம் தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஷுபம் குப்தா. இவர் ராணுவத்தில் சேர்த்து அங்கு கேப்டனாக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த புதன்கிழமை அன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் பணியாறிக்கொண்டிருந்தபோது, அங்கு தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்.
இதில் கேப்டன் ஷுபம் குப்தா வீர மரணடைந்தார். நாட்டுக்காக உயிரை இழந்த வீரரின் தியாகத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு உத்தரபிரதேச அரசு சார்பில் நிதியுதவு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த உதவித்தொகையை கேப்டன் ஷுபம் குப்தாவிடம் அளிக்க அரசு சார்பில், உத்தரபிரதேச அமைச்சர் யோகேந்திர உபாத்யா என்பவர் ஷுபம் குப்தாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கேப்டன் ஷுபம் குப்தாவின் தாய் மகனின் பிரிவால் கடும் துயரத்தில் அழுது கொண்டிருந்தார்.
அப்போது, அவரின் அழுகையையும் மீறி நிதியுதவி கொடுப்பதை புகைப்படம் எடுக்க பாஜக அமைச்சர் முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான வீடியோவில், கேப்டன் ஷுபம் குப்தாவின் தாய் அழுதுகொண்டிருந்த நிலையில், அவரிடம் நிதியுதவிக்கான காசோலையை வழங்க அமைச்சர் முயல்கிறார்.
எனினும் கேப்டன் ஷுபம் குப்தாவின் தாய் கதறிக்கொண்டிருந்த நிலையில், அவரின் கையில் வலுக்கட்டாயமாக காசோலையை கொடுத்து, புகைப்படம் எடுக்க அமைச்சர் முயன்றது பதிவாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில், பலரும் பாஜக அமைச்சரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.