ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதே நேரம் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் கூறிவருகின்றன.
இதனால் பா.ஜ.க தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களை வேட்பாளராக அறிவித்துத் தேர்தலைச் சந்திக்கிறது. இது பா.ஜ.கவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்த்த நிலையில் கட்சிக்குள் கோஷ்டியை உருவாக்கியுள்ளது.
அதோடு ராஜஸ்தான் பா.ஜ.கவில் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜேவின் ஆதரவாளர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர்கள் கட்சித் தலைமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் ரேஸில் வசுந்தரா ராஜே மட்டும் இல்லை. அவருடன் ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகா வத், பா.ஜ.க மூத்த தலைவர்கள் பாலக்நாத், ராஜேந்திர ரத்தோர், சதீஷ் பூனியா, சி.பி.ஜோஷி என மேலும் 5 பேர் உள்ளதால் பா.ஜ.கவிற்குள் கோஷ்டி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதை எதிர்கொள்ள முடியாமல் மோடி - அமித்ஷா கூட்டம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி கிடக்கின்றனர். இதனால்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் ராஜஸ்தானில் பா.ஜ.க தேர்தலைச் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே பா.ஜ.கவின் தோல்வியை உறுதி செய்து விட்டதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.