ஆந்திரா மாநிலம், புத்தூரைச் சேர்ந்தவர் ஆதி மூலம் லட்சுமணா. விவசாயியான இவர் தனது மகளின் திருமணத்திற்காகச் சிறு சிறு இரும்பு வெட்டி ஒன்றில் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மகள் திருமணத்திற்காக எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது என்று எண்ணிப்பார்ப்பதற்காக இரும்புப் பெட்டியை எடுத்துத் திறந்து பார்த்துள்ளார். அப்போது பணத்தை கறையான்கள் அரித்து ஓட்டை ஓட்டையாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகு இரும்புப் பெட்டியிலிருந்த முழு பணத்தையும் கீழே கொட்டி பார்த்தபோது அதிலிருந்த அனைத்து பணமும் துண்டு துண்டாகச் சேதமாகி இருந்தது. மொத்தம் ரூ. 2 லட்சம் வரை சேர்த்து வைத்த பணத்தை கறையான்கள் அரித்து நாசமாக்கியதைப் பார்த்து ஆதி மூலத்தின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
இது குறித்து ஆதி மூலம் லட்சுமணா, "இரும்புப் பெட்டியில் பணத்தைச் சேர்த்தால் அனைத்தும் கறையான் அரித்து நாசமாக்கிவிட்டது. என்னுடைய நிலையைக் கருதி தனது மகள் திருமணத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும்" என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.