கேரள மாநிலம் கோட்டயம் பாம்படி பகுதியில் உள்ள தனியார் விடுதி அருகே நீண்ட நேரமாக கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அந்த விடுதி ஊழியர்கள் காரில் யாராவது இருக்கிறார்களா என பார்த்தபோது ஒருவர் அமர்ந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கார் கண்ணாடியைத் தட்டிப்பார்த்தபோது அவரிடம் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. இதனால் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு போலிஸார் விரைந்து வந்து பார்த்தனர்.
பின்னர் அவர்கள் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்தவரை அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் உயிரிழந்தது சினிமா நடிகர் வினோத் தாமஸ் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் ஏர் கண்டிஷனிங் சிஸ்டத்தில் இருந்து விஷவாயு கசிந்து அவர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் உடற்கூறு ஆய்வு அறிக்கைக்கு பிறகே அவரது இறப்பிற்கான முழுக்காரணம் தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நடிகர் வினோத் தாமஸ், அய்யப்பனும் கோஷியும், பூதகாலம், நாத்தோலி ஒரு செரிய மீனல்லா, மற்றும் வாஷி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாகப் பகவான் தசந்தே ராமராஜ்யம் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.