கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் அருகே உள்ள ஹோசக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரதீபா என்ற இளம்பெண்ணுக்கு, கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் என்ற இளைஞருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2 வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இதில் கிஷோர் சாம்ராஜ்நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த சூழலில் மனைவி பிரதீபாவுக்கு நண்பர்கள் வட்டாரம் பெரிது என்பதால் திருமணத்திற்கு பிறகு தினமும் தனது இரு பாலின (ஆண், பெண்) நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதோடு இது கிஷோருக்கு, அவரது மனைவி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில், பிரதீபா கருவுற்றிருந்தார். அதன் பிறகும் இருவருக்குள்ளும் சண்டை ஓய்ந்தபாடில்லை. இந்த சூழலில் கடந்த மாதம் பிரசவத்திற்காக ஒசக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் பிரதீபா. அங்கே கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
இதனை கணவர் கிஷோருக்கு தெரிவித்தும் அவர், தனது மனைவி மீதுள்ள கோபத்தை மறக்கவில்லை. மாறாக தாய் வீட்டில் இருக்கும் மனைவியிடம் போனில் பேச அழைத்த போது போன் கால் வெயிட்டிங்கில் சென்றதால் யாருடன் பேசுகிறாய் ? என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி, கடும் வார்த்தைகளால் வசைபாடியுள்ளார்.
இதனால் கடும் மன உளைச்சலில் அழுது கொண்டிருந்துள்ளார் பிரதீபா. எனவே, அவர் உடலில் இதனால் பிரச்னை ஏற்பட்டால் பிள்ளைக்கும் பிரச்னை என்பதால், கணவர் ஃபோனை எடுக்க வேண்டாம் என்று கூறி சைலன்ட் மோடில் போட்டுள்ளார். தொடர்ந்து பல முறை கணவர் கிஷோர் அழைத்தும் மனைவி போனை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிஷோர், மனைவி வீட்டுக்கு வந்து அவரது அறையை பூட்டி வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அருகில் இருந்த துணியால் அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதில் கத்தி கூச்சலிட தாயும் வந்து கதவை தட்டியுள்ளார். ஆனாலும் அவர் விடாமல் நெரித்தலில் மனைவி உயிரிழந்தார். பின்னர் வெளியே வந்து கொலை செய்து விட்டதாக கூறிவிட்டு, தான் கொண்டு வந்த பூச்சி மருந்தையும் குடித்துள்ளார் கிஷோர். சம்பவம் குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தற்கொலைக்கும் என்ற கிஷோரை மீட்டு மருத்துவமனையின் அனுமதித்தனர்.
மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரதீபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது கிஷோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.