இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்துத்துவ கருத்துக்களை எப்படியாவது பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் நுழைத்துவிட வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்தவே முயற்சி செய்து வருகிறது.
இதற்காகப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ். கருத்து கொண்டவர்களை நிர்வாகத்திற்குள் அனுமதி கொடுத்து தங்களது திட்டங்களைச் செயல்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ செயற்பாட்டாளர்களான கோல்வால்கர், சாவர்க்கர், தீனதயாள் உபாத்தியாயா ஆகியோர் தொடர்பான பாடங்களைத்தான் கல்வித் திட்டத்தில் உட்புகுத்த பா.ஜ.க முயற்சி செய்கிறது.
இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உட்படப் பலரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் பா.ஜ.க ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் எளிதாகப் பாடத்திட்டங்களில் ஆர்.எஸ்.ஸ் கருத்துக்களைப் புகுத்தி விடுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது பா.ஜ.க ஆட்சி செய்து வரும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பகவத்கீதை, ராமாயணம், உபநிடதங்கள் மற்றும் சாணக்கியர்களின் போதனைகளை உள்ளடக்கி 5 ஆண்டு BBA-MBA படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டப்படிப்பில் 10 செமஸ்டர் தேர்வுகள் இருக்கும் என்றும் இந்திய மேலாண்மை சிந்தனை, ஆன்மீகம், கலாச்சார நெறிமுறைகள், செயற்கை நுண்ணறிவு போன்ற தலைப்புகளில் பாடங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இப்பட்டப்படிப்பில் சேரும் ஒரு மாணவர் முதல் ஆண்டே படிப்பை விட்டுவிட்டால் அவருக்கு ஒரு வருட சான்றிதழ் வழங்கப்படும் என்றும் இரண்டாம் ஆண்டு முடித்தவர்கள் டிப்ளமோவும், மூன்றாம் ஆண்டில் பிபிஏ பட்டமும், ஐந்தாம் ஆண்டில் எம்பிஏ பட்டமும் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டப்படிப்பு அறிமுகப் படுத்தப்பட்டதை அடுத்து கல்வியாளர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.