40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியிலிருந்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 174 வேட்பாளர்கள் போட்டியிட்டு இருக்கிறார்கள். இவர்களது வெற்றியை 8.57 லட்சம் வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
மிசோரம் மாநிலம் முழுவதும் 1276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச எல்லைகளில் 30 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இங்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காத வகையில் மாநிலம் முழுவதும் 7200 போலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியதுமே மிசோரம் மாநில முதலமைச்சர் ஜோரம்தங்கா ஹால் வாக்குச் சாவடியில் தனது வாக்கைச் செலுத்த வந்தார். அப்போது திடீரென வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனே அதைச் சரி செய்ய முயன்றனர். ஆனால் அதிகாரிகளால் முடியவில்லை.
இதனால் முதலமைச்சர் ஜோரம் தங்கா உடனே அங்கிருந்து தனது வீட்டிற்குக் கிளம்பிச் சென்று விட்டார். இதற்கு முன்னதாக பேட்டி கொடுத்த அவர், "நான் வாக்களிக்க வந்தபோது வாக்குப்பதிவு எந்திரம் வேலை செய்யவில்லை. சிறிது நேரம் காத்திருந்தேன். ஆனால் எந்திரம் சரியாகவில்லை. இதனால் நான் மீண்டும் வந்து வாக்களிப்பேன். இந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று மீண்டும் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம்" என தெரிவித்துள்ளார்.
மிசோரம் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க 23 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஆம். ஆத்மி கட்சி 4 இடங்களில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.