கணவன், மனைவி இருவரில் ஒருவர் இறந்து விட்டால் ஒருவர் அடுத்த திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வசித்துவருவது இச்சமூகத்தில் பொதுவான ஒன்றாக இருந்து வருகிறது. சில பேர்மட்டும் தான் மறு திருமணம் செய்து கொள்கிறார். மேலும் சிலர் தங்களது பெற்றோரின் தனிமையை உணர்ந்து அவர்களுக்கு மறு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகளும் தற்போது அதிகரித்துள்ளது.
அந்த வகையில் கேரளாவில் மனைவி இறந்து தனியாக வாழ்ந்து வந்த 62 வயது தந்தைக்கு மகள்கள் இணைந்து மறு திருமணம் செய்து வைத்துள்ளனர். கேரள மாநிலம் திருவல்லா பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
இதில் இரண்டு மகள்களுக்கும் திருமணமாகி அவர்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அதேபோல் மகன் கொல்லத்தில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் மனைவி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.
இதையடுத்து மனைவி இறந்த சோகத்தில் ராதாகிருஷ்ணன் இருந்து வந்துள்ளார். இவரால் பழையபடி இயல்பாக இருக்க முடியவில்லை. இதை உணர்ந்த பிள்ளைகள் தந்தைக்கு மறு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அவரிடத்திலும் இது குறித்துக் கேட்டு ஒப்புதல் வாங்கியுள்ளனர்
பின்னர் திருமண இணையத்தில் தேடியபோது கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்த மல்லிகா குமாரி என்பவர் குறித்த விவரம் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரிடமும் அவரது குடும்பத்தினரோடும் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு மல்லிகா குமாரியும் இந்த திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ராதாகிருஷ்ணன் மற்றும் மல்லிகா குமாரி திருமணம் அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கோவில் ஒன்றில் நடைபெற்றது. இந்த திருமணம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.