இந்தியா

வெற்றிகரமாக நடைபெற்ற 'ககன்யான்' மாதிரி சோதனை : விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ISRO !

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' மாதிரி சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக நடைபெற்ற 'ககன்யான்' மாதிரி சோதனை : விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ISRO !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரண் லேண்டர் வெற்றிகரமான நிலவில் தரையிறக்கி சோதனை நடத்தியது. இதன் மூலம் நிலவில் கால்பதித்த நான்காவது நாடு என்ற பெருமையை இஸ்ரோ அமைப்பின் மூலம் இந்தியா பெற்றது.

வெற்றிகரமாக நடைபெற்ற 'ககன்யான்' மாதிரி சோதனை : விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ISRO !

இந்த சாதனைகள் காரணமாக நிலவுக்கு அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்.1 விண்கலத்தை இஸ்ரோ அமைப்பு விண்ணில் ஏவப்பட்டது. அடுத்ததாக மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்த திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டது.

ககன்யான் மாதிரி விண்கலத்தின் முதல் கட்ட சோதனை இன்று காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கி நடைபெற்ற நிலையில், வானிலை காரணமாக இன்று மூன்று முறை இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இறுதியாக விண்ணில் செலுத்த 5 நொடிகளே இருந்த நிலையில், தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக , சோதனை ஒத்திவைக்கப்பட்டது.

வெற்றிகரமாக நடைபெற்ற 'ககன்யான்' மாதிரி சோதனை : விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ISRO !

பின்னர் காலை 10 மணி அளவில் மீண்டும் கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்கலம் TV-D1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் ராக்கெட்டிலிருந்து மனிதர்கள் இருக்கும் கலனை பூமியில் பத்திரமாக தரையிறங்க வைக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் வங்கக்கடலில் விண்கலம் சென்றுகொண்டிருந்தபோது பிரிந்த மனிதர்கள் இருக்கும் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பின்னர் பாராசூட் உதவியுடன் பத்திரமாக வங்கக்கடலில் தரையிறங்கியது. இதன் மூலம் இந்த சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ ஆய்வாளர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories