அண்மைக்காலமாக இரயில் குறித்த பதைபதைக்கும் செய்திகள் வெளியாகி பயணிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒடிசா இரயில் விபத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். நாட்டையே உலுக்கிய இந்த இரயில் விபத்தை தொடர்ந்து இரயில் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன.
அண்மையில் கூட சென்னையில் நின்று கொண்டிருந்த இரயிலில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. வட மாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், விதிகளை மீறி, சிலிண்டர் கொண்டு வந்து சமைக்க பார்த்ததால் இந்த அச்சம்பாவிதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சூழலில் தற்போது மீண்டும் ஓடிக்கொண்டிருந்த இரயிலில் தீ விபத்து நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ளது அகமதுநகர் என்ற பகுதி. இங்கிருந்து ஆஷ்தி என்ற பகுதிக்கு புறநகர் இரயில் ஒன்று இன்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது. அப்போது சுமார் 3.30 மணியளவில் நாராயண்பூர் என்ற இரயில் நிலையம் அருகே இந்த இரயில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெட்டியில் தீ பிடித்துள்ளது.
இதனை குறித்து பயணிகள் சுதாரிப்பதற்குள், அடுத்தடுத்து என 5 பெட்டிகளில் அந்த தீ பரவியது. உடனடியாக இரயில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி தூரமாக ஓடினர். இதைத்தொடர்ந்து இரயில்வே அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கியதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாகியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.