புதுச்சேரி வில்லியனூர் அரியூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (40). இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த சூழலில் கடந்த 4 ஆம் தேதி வழக்கம்போல் பணி முடிந்து இரவு நேரம் பேருந்தில் சென்றார்.
தான் இறங்க வேண்டிய இடம் வந்த பிறகு, பேருந்தில் இருந்து இறங்கி அரியூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கோவிந்தம்மாளை மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்து மண்டையில் இரும்பு பைப்பால் அடித்துவிட்டு அந்த பைப்பை அங்கே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் இரத்த வெள்ளத்தில் அவர் வீட்டின் அருகே மயங்கி விழுந்த கோவிந்தம்மாளை அவரது மூத்த மகன் அருண் குமார் மீட்டு சிகிச்சைகாக ஜிப்மர் மருத்துவமனை அழைத்து சென்றார்.
ஆனால் செல்லும் வழியிலேயே கோவிந்தம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து மருத்துவர்களுக்கும் அவரை பரிசோதித்து ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அப்போது கோவிந்தம்மாள் தாக்கப்பட்ட இடத்தில் கிடந்த இரும்பு பைப்பை வைத்து விசாரிக்கையில், அந்த பைப் புதுச்சேரி திருபுவனையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த தொழிற்சாலையில் விசாரித்தனர். மேலும் மோப்ப நாய் உதவியோடு கோவிந்தம்மாள் தாக்கப்பட்ட இடத்திற்கு சென்றபோது, கோவிந்தம்மாள் வீட்டருகே சென்று நின்றது.
இதனால் பக்கத்துக்கு வீட்டார் மீது போலீசார் சந்தேகமடைந்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளும்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பஞ்சமூர்த்தி (32) இரும்பு தொழிற்சாலையில் பணி புரிவது தெரியவந்தது. பின்னர் பண்ருட்டியில் இருந்த அவரை புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்தான் கோவிந்தம்மாளை கொலை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரிக்கையில், அவருக்கும், கோவிந்தம்மாளுக்கும் இடையே கால்வாயில் குப்பை கொட்டுவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் கோவிந்தம்மாள் அவரையும் அவரது குடும்பத்தையும் தரக்குறைவாக திட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும் சமீபத்தில் இதுபோல பிரச்சினை வந்தபோது, கோவிந்தம்மாள், 6 மாத கர்பிணியாக இருந்த அவரது மனைவியை பார்த்து உனக்கு வாரிசு உருவாகாது என்றும், அது அழிந்துவிடும் என்றும் சாபம் விட்டதாக கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பஞ்சமூர்த்தி திட்டமிட்டு, கோவிந்தம்மாளை கொலை செய்ததாகவும் அவரே வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து பஞ்சமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.