மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் சுகாதாரத்துறை படுமோசமாக இருப்பதைக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அம்பலப்படுத்தியது.
இம்மாநிலத்தில் உள்ள நாந்தேட்டி பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 2 நாளில் 31 நோயாளிகள் போதிய மருந்து வசதிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்துள்ளனர். இதில் 12 பேர் பிறந்த குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொடூரத்தை மருத்துவமனையின் டீன் வெளியே சொன்ன பிறகுதான் எல்லோருக்கும் உண்மை என்னவென்று தெரியவந்தது. இந்நிலையில் மருத்துவமனை டீன் ஷ்யாம் ராவ் வகோடாவை வலுக்கட்டாயமாக ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமந்த் பாட்டீல், கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு அம்மாநில மருத்துவர்கள் சங்கம், "அரசியல் ஆதாயத்துக்காக ஊடகங்கள் முன்னிலையில் மருத்துவமனை டீனை கட்டாயப்படுத்தி கழிப்பறையைச் சுத்தம் செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என தெரிவித்துள்ளது.
பின்னர் மருத்துவமனை டீன் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் ஹேமந்த் பாட்டீல் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசு மருத்துவமனை டீனை வலுக்கட்டாயமாக கழிவறை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.