ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஊடகங்களின் மீதான அச்சுறுத்தல் அதிகரித்து விட்டது. சில மாதங்களுக்கு முன்பு குஜராத் கலவரம் குறித்து ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி அலுவலகத்தில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
தற்போது ஒன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி வந்த நியூஸ் க்ளிக் இணையப் பத்திரிக்கை மீது ரெய் நடத்தியுள்ளது ஒன்றிய அரசு. டெல்லியில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் News Click இணைய தளத்தின் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் வீடுகள் உட்பட 30 இடங்களில் நேற்று டெல்லி சிறப்புப் பிரிவு போலிஸார் சோதனை நடத்தினர்.
நேற்று இரவு வரை நடந்த இந்த ரெய்டுக்கு பிறகு News Click இணையதள அலுவலகத்திற்குச் சீல் வைக்கப்பட்டது. பிறகு அதன் உரிமையாளர்கள் அதன் உரிமையாளர்கள் பிரபீர் புர்காயஸ்தா, அமித் சக்கரவர்த்தி ஆகியோரை டெல்லி போலிஸார் கைது செய்தனர். ஊடகத்தின் குரல்வளையை நசுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு இந்தியா கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சக பத்திரிக்கையாளர்களும் மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சீன நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதி பெற்ற PM CARESஐ நிர்வகிப்பவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், "சீனாக்காரர் ஒருவரிடமிருந்து கொஞ்சம் நிதி வந்த ஒரே காரணத்துக்காக, நியூஸ்க்ளிக் மீது தேசதுரோக வழக்கு. அந்த நிறுவனத்தோடு தொடர்பு கொண்டவர்களின் வீடுகளில் ரெய்டு, அவர்களின் செல்பேசிகளும் லேப்டாப்களும் பறிமுதல். ஆனால் சீன நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் நிதி பெற்ற PM CARES-ஐ நிர்வகிப்பவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை?" என கேள்வி எழுப்பியுள்ளார்.