மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் சுகாதாரத்துறை படுமோசமாக இருப்பதை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் நடந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இம்மாநிலத்தில் உள்ள நாந்தேட்டி பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் போதிய மருந்து வசதிகள் இல்லாததால் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த அவலத்தை அம்மருத்துவமனையின் டீன் தான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அப்போது கூறிய அவர், "இந்த மருத்துவமனை ஒரு மூன்றாம் நிலை மருத்துவமனை. 70 முதல் 80 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு இந்த ஒரே மருத்துவமனைதான் உள்ளது.
இதனால் தொலைதூரங்களில் இருந்தும் நோயாளிகள் வருவதால் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவர்களுக்குத் தேவையான மருந்து வசதிகளும் இல்லை. மேலும் மருத்துவர்களும் இல்லை. இதனால் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து சிகிச்சை பார்த்து வருகிறோம். இதன் காரணமாகத் தான் 24 நோயாளிகள் இறந்துள்ளனர்" என குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மேலும் மருத்துவமனையில் என்ன நடந்தது என விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தை அடுத்து எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறன.
முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் சவான், "500 பேர் மட்டுமே மருத்துவம் பார்க்கக் கூடிய மருத்துவமனையில் 1200க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். அரசின் அலட்சியத்தாலே இந்த சம்பவம் நடந்ததுள்ளது. மருத்துகள் இல்லை. ஊழியர்கள் பற்றாக்குறை. செவிலியர்கள் இல்லை என எந்த விதமான வசதியும் இங்கு இல்லை" என கூறியுள்ளார். அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே, "24 அப்பாவி மக்களின் மரணத்திற்கு மூன்று இன்ஜின் அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.