இந்தியாவில் 2014ம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களில்ன் அன்றாட தேவைகளின் பொருட்கள் விலை அதிகரித்த வண்ணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலை உயர்ந்தே காணப்பட்டு வருகிறது. 2014-ல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.417 ஆக இருந்தது. ஆனால் படிப்படியாக ரூ.1118 ஆக உயர்ந்தது. இந்த விண்ணை முட்டும் விலை உயர்வால் குடும்பத் தலைவிகள் கடும் அவதிகளைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த கடும் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. அப்போது எல்லாம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் என மோடி அரசு கூறியது. பின்னர் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் கூட சிலிண்டர் விலையை மோடி அரசு குறைக்கவில்லை.
தொடர்ந்து மக்களும் எதிர்க்கட்சிகளும் விலை உயர்வை ஒன்றிய மோடி அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறி வந்தது. இந்த சூழலில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் நாடாளுமன்ற தேர்தலும் நெருங்கும் நிலையில், சிலிண்டர் விலையை குறைக்க முன்வந்துள்ளது மோடி அரசு.
அதன்படி கடந்த மாதம் (செப்டெம்பர்) 1-ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்ததோடு, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையையும் ரூ.157.50 குறைக்கப்பட்டது.
ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு தேர்தல் நாடகம் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வந்த நிலையில், தற்போது சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. அதன்படி 19 கிலோ வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 அதிகரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் நேற்று வரை 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1695-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் ரூ.203 உயர்ந்து ரூ1,898-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வணிக பயன்பாட்டுக்கான 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.49 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.495 பாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் ரூ.544-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஒன்றிய அரசு மீது கடும் எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையை ஆகஸ்ட் மாத இறுதியில் குறைத்து விட்டு, தற்போது அந்த விலை குறைப்பை வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதாக மக்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.