பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவு அரங்கேறி வருகிறது. அதிலும் பாலியல் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரித்தே காணப்படுகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர பா.ஜ.க ஆளும் மாநில அரசுகள் பெரிதாக முயற்சிகூட எடுக்கவில்லை என்று மக்கள் மத்தியில் குற்றசாட்டுகள் உள்ளது. இந்த சூழலில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் செளகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அமைந்திருக்கும் உஜ்ஜைன் பகுதியில் 12 வயது சிறுமியின் மனதை பதறவைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அந்த சிறுமி இரத்த கோரங்களுடன் மிகவும் சோர்வடைந்த நிலையில் தெருவில் அரை நிர்வாணத்துடன் ஒவ்வொரு வீட்டு கதவையும் தடுக்கிறார்.
அவர்களிடம் உதவி கேட்கிறார். ஆனால் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. சுமார் 8 கி.மீ வரை அந்த சிறுமி நடந்து சென்று உதவி கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இந்த சமயத்தில் 2 மணி நேரம் கழித்து ஒரு ஆஸ்ரமத்தில் உள்ள துறவி ஒருவர் சிறுமியை கண்டு பதற்றமடைந்து துண்டால் அவரது உடலை மூடி, பின்னர் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்.
அங்கே சிறுமியை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறுமிக்கு அதிகளவு இரத்த போக்கு இருந்ததால், அதில் போலீஸ் அதிகாரி ஒருவர் இரத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து சிசிடிவி காட்சியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியிடம் விசாரித்ததில் அவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்தவராக தெரிவதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் சிறுமி யார், யாருடன் எங்கே இருந்து வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்பிரிவு அமைக்கப்பட்டு, குற்றச்சம்பவம் எங்கே நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 'மரித்தது மனிதம்..' என்பது போல் இரத்த காயங்களுடன், உதவி கேட்டு வந்த சிறுமியை 8 கி.மீ வரை யாரும் கண்டுகொள்ளாத சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல், கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகரித்தே காணப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு தற்போது நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு ம.பியின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், "12 வயது சிறுமி உஜ்ஜயின் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி ரத்தம் வழிய வீடு வீடாக சென்று ஒரு மணி நேரமாக உதவி கேட்டும் யாரும் உதவ முன்வராத அதிர்ச்சி சிசிடிவி காட்சிதான் இது. மாநில பாஜக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.