இந்தியாவில் 900க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல்வேறு ஆன்லைன் விளையாட்டுகளை வழங்கி வருகின்றன. இதற்காக, இந்நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து வரும் சேவைக் கட்டணத்தில் சிறிய அளவு தொகையை அரசுக்கு வரியாகச் செலுத்தி வருகின்றன.
ஆனால் சமீபத்தில் கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு நிறுவனங்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ட்ரீம் 11, ஆன்லைன் ரம்மி போன்ற பல்வேறு நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அதே நேரம் இந்த ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு நிறுவனங்கள் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. இது குறித்த வழக்குகளும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் (DGGI) சுமார் 12 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ரூ. 55,000 கோடி மதிப்புள்ள வரி பாக்கிகள் தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதன்படி ட்ரீம்11, கேமிங் யூனிகார்ன் போன்ற நிறுவனங்கள் ரூ.25,000 கோடி அளவுக்கு வரி பாக்கி வைத்தது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 1 டிரில்லியன் அளவு வரிப்பாக்கி வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் துறையாக இருக்கும் ஆன்லைன் விளையாட்டு துறையின் முக்கிய நிறுவனங்கள் இத்தனை கோடி அளவு வரி செலுத்தாமல் இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.