உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலை பகுதியின் மலைப்பகுதியில் ஜோஷிமத் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நகரத்தை சுற்றியுள்ள மலை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் திடீர் திடீர் என நிலச்சரிவுகள் ஏற்பட்டது. நிலநடுக்கம்,பெருமழை போன்ற நிகழ்வுகள் ஏதும் நடக்காத நிலையில், நிலச்சரிவுகள் ஏற்பட்டது அந்த நகர மக்களிடையே பீதியை ஏற்பட்ட நிலையில், அனைத்தும் சரியாகிவிடும் என்று நம்பியுள்ளனர்.
ஆனால், அடுத்த சில நாட்களில் சில வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில், வேறு சில வீடுகளின் கட்டிடங்களும் விரிசல் விடத்தொடங்கியது. இதனால் உஷாரான உத்தராகண்ட் அரசு அங்கு அறிவியலாளர்களை அனுப்பி சோதனை செய்ததில் அந்த நகரமே சில நாட்களில் மண்ணில் புதைந்து விடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த நகரில் இருப்பவர்களை மீட்கும் பணியில் அரசு முழு வீச்சில் இறங்கியது.
தற்போதைய சூழலில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில், அதற்கு அருகில் இருக்கும் கர்ணபிரயாக் நகரில் உள்ள பகுகுணா நகரிலும் சுமார் 50 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. திடீரென இந்த நகரம் மண்ணில் புதைய காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய எட்டு நிபுணர் குழுக்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டன.
ஆனால், அந்த குழுவின் ஆய்வுகள் குறித்த எந்த விவரமும் பொதுஅரங்கில் பகிரப்படவில்லை. இதன் காரணமாக உத்தராகண்ட் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. அந்த, தலைமைச் செயலாளர் வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜோஷிமத் குறித்த அறிக்கை, உத்தராகண்ட் நீதிமன்றத்தில் சீல்டு கவரில் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது அறிக்கையில் உள்ள தகவல்களைப் பார்த்த நீதிபதிகள், இதனை ரகசியமாக வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை எனக் கூறி, அறிக்கையில் உள்ள முக்கிய தகவல்களை பொதுமக்களும் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். மேலும், தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து வழக்கையும் ஒத்திவைத்தனர்.